2017-08-09 16:43:00

கொலை மிரட்டலால் போலீஸ் பாதுகாப்பு கோரும் சகாயம் ஐஏஎஸ்


ஆக.09,2017. நேர்மையான அரசு ஊழியர் என்று பெயர் பெற்றுள்ள சகாயம் ஐஏஎஸ் அதிகாரி, தனக்கு கொலை மிரட்டல் வருவதாக போலீஸ் பாதுகாப்பு கேட்டு சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

சகாயம் அவர்கள், தமிழகத்தில் நடைபெறும் பல்வேறுதரப்பட்ட சுரங்க நடவடிக்கைகள் குறித்து கண்காணிக்க நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்டுள்ள சட்ட ஆணையராவார். இந்நிலையில், ஆகஸ்ட் 7, இத்திங்களன்று சகாயம் அவர்கள், தனக்கு கொலை மிரட்டல் வருவதாக போலீஸ் பாதுகாப்பு கேட்டு, உயர் நீதிமன்றத்தில் மனு செய்துள்ளார்.

மதுரையில் கிரானைட் முறைகேடு நடைபெறுகிறது என்று சமூக ஆர்வலர் டிராபிக் ராமசாமி அவர்கள், 2013-ம் ஆண்டு வழக்குத் தொடர்ந்தார். இதன் மீது விசாரணை நடத்த சென்னை உயர் நீதிமன்றம் 2014-ம் ஆண்டு உத்தரவிட்டது. இதற்காக ஐஏஎஸ் அதிகாரி சகாயம் அவர்கள் தலைமையிலான 40 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டது.

இந்த விசாரணையில், சகாயம் அவர்களுக்கு உதவிபுரிந்த சேவற்கொடியோன் என்பவருக்கும் பாதுகாப்பு வேண்டும் என்று, வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் அவர்கள் மனு அளித்தார்.

மனுவை ஏற்றுக்கொண்ட நீதிபதிகள் தமிழக அரசு இது குறித்து விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, அடுத்த விசாரணையை 14-ம் தேதிக்கு ஒத்திவைத்தனர்.

மேலும், சகாயம் அவர்களுக்கு உதவி புரிந்த எஸ்.பார்த்தசாரதி அவர்களின் மரணம் குறித்து விரிவான விசாரணை வேண்டுமென்றும் வழக்கறிஞர் இராதாகிருஷ்ணன் கோர்ட்டில் முறையிட்டார். ஏப்ரல் 2015-ம் தேதி, மதுரை அருகே, கார் மரத்தில் மோதி பார்த்தசாரதி உயிரிழந்தார்.

ஆதாரம் : தி இந்து / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.