2017-08-07 16:11:00

வரலாற்றில் முத்திரைப் பதித்துச் செல்லட்டும் இளையோர்


ஆக‌.07,2017. இந்தோனேசியாவில் இஞ்ஞாயிறன்று முடிவுற்ற ஆசிய இளையோர் தின நிறைவு நிகழ்ச்சிக்கு, திருத்தந்தையின் வாழ்த்துக்களை வெளியிடும் சிறப்புச் செய்தி ஒன்றை அனுப்பியுள்ளார், திருப்பீடச் செயலர்.

7வது ஆசிய இளையோர் தினத்தையொட்டி, இந்தோனேசியாவின் யோக்யகர்த்தாவில் கூடியிருந்த இளயோரை திருத்தந்தை வாழ்த்துவதுடன், தன் செப உறுதியை தெரிவிப்பதாகவும் திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளச் செய்தி கூறுகின்றது.

மேலும்,  ஆசியா முழுவதும் உள்ள இளையோர், இறைவனின் அழைப்புக்கு விசுவாசத்துடனும் மன உறுதியுடனும் பதிலளிப்பதற்கு திருத்தந்தை செபிப்பதாகவும் இச்செய்தியில் கூறப்பட்டுள்ளது.

வரவிருக்கும் உலக இளையோர் நாள் நிகழ்வுகளுக்கு தங்களைத் தயாரித்துவரும் இளையோர், அன்னைமரியை தங்கள் முன்மாதிரிகையாகக் கொண்டு, அவரிடம் தங்கள் சொந்த தாயைப்போல் பேசி, அவரின் பரிந்துரையில் நம்பிக்கைக் கொள்வார்களாக' என திருத்தந்தை அச்செய்தியில் கூறியுள்ளார்.

இயேசுவை நெருக்கமாக பின்பற்றுவதன் வழியாக, அன்னைமரியாவைப்போல் உலகை மேம்படுத்த, இளையோர் உதவுவதுடன், வரலாற்றில் தங்கள் முத்திரையைப் பதித்துச் செல்பவர்களாக இருப்பார்களாக' என  திருத்தந்தையின் நம்பிக்கையை மேலும் எடுத்துரைக்கிறது, கர்தினல் பரோலின் அவர்களின் செய்தி.

பானமாவில் 2019ம் ஆண்டு ஜனவரி 22 முதல் 27 வரை சிறப்பிக்கப்படவுள்ள உலக இளையோர் தினக் கொண்டாட்டங்களுக்கு தயாரிப்பாக, இம்மாதம் 2ம்தேதி முதல் 6 வரை, இந்தோனேசியாவின் யோக்யகர்த்தா நகரில், 7வது ஆசிய இளையோர் நாள் கொண்டாட்டங்கள்  இடம்பெற்றன.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.