2017-08-05 14:06:00

பாசமுள்ள பார்வையில்: 1000 காகித நாரைகள் தரும் அமைதி


1945ம் ஆண்டு, ஆகஸ்ட் 6ம் தேதி, ஹிரோஷிமாவில் அணுகுண்டு தாக்குதல் நிகழ்ந்தபோது, சடக்கோ சசாக்கி (Sadako Sasaki) என்ற பெண் குழந்தைக்கு 2 வயது. பத்தாண்டுகள் கழித்து, அச்சிறுமிக்கு, இரத்தப் புற்றுநோய் ஏற்பட்டது. அவருக்கும், இன்னும் பலநூறு சிறுவர், சிறுமியருக்கும் உருவான இரத்தப் புற்றுநோய், அணுக்கதிர் வீச்சினால் உருவானது என்று கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி சடக்கோ, இனி ஓராண்டு வாழக்கூடும் என்று கூறப்பட்டது. சாவதற்கு தான் விரும்பவில்லை என்று, அவர் கூறியபோது, அச்சிறுமியின் தோழிகள், அவரிடம், 'காகித நாரைகள்' பற்றிய பாரம்பரியக் கதையைக் கூறினர்.

அதாவது, ஒருவர், 1000 காகித நாரைகளைச் செய்தால், அவர் விழையும் ஓர் ஆசை நிறைவேறும் என்ற கதையைச் சொன்னார்கள். அதன்படி, சிறுமி சடக்கோ, காகித நாரைகளைச் செய்ய ஆரம்பித்தார். அவர் 644 நாரைகள் செய்து முடித்ததும் இறந்தார். அவர் இறந்ததும், அவரது நண்பர்கள் சேர்ந்து, பல்லாயிரம் காகித நாரைகளைச் செய்து, நிதி திரட்டி, சிறுமி சடக்கோ நினைவாக ஒரு சிலையை நிறுவினர்.

இன்றளவும், காகித நாரைகளை, சிறு குழந்தைகள் செய்து, அந்தச் சிலைக்கருகே காணிக்கையாக வைக்கின்றனர். சிறுமி சடக்கோ, 1000 நாரைகளைச் செய்யத் துவங்கிய வேளையில், அவர் மனதில் என்னென்ன ஆசைகள் இருந்திருக்கும் என்பதைச் சிறிது கற்பனை செய்து பார்க்கலாம். தான் உயிர் வாழவேண்டும் என்ற ஆசை, கட்டாயம் அச்சிறுமியின் மனதில் இருந்தது. அத்துடன், தான் துன்புறுவதுபோல், இனி உலகில் எந்தக் குழந்தையும் துன்புறக்கூடாது என்ற ஆசையும் அக்குழந்தையின் மனதில் தோன்றியிருக்கும் என்று நம்பலாம்.

இன்றும், சடக்கோவின் சிலைக்கருகே காகிதப் பறவைகளைக் காணிக்கையாக்கும் ஆயிரக்கணக்கான குழந்தைகள், ஹிரோஷிமாவில் நிகழ்ந்தது, இனி, உலகில் ஒருபோதும் நிகழக்கூடாது என்ற ஆசையுடன் இந்தக் காணிக்கையைச் செலுத்துகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.