2017-08-05 15:38:00

கிறிஸ்தவ இளையோர் கிறிஸ்துவின் ஒளியை எடுத்துச்செல்ல...


ஆக.05,2017. கிறிஸ்தவ இளையோர், நல்ல தலைவர்களாக உருவாக வேண்டும் மற்றும், கிறிஸ்துவின் ஒளியை எடுத்துச் செல்ல வேண்டும் என, இந்தோனேசியா நாட்டின் யோக்யகார்த்தாவில் நடைபெற்றுவரும் 7வது ஆசிய இளையோர் நாள் நிகழ்வில், கூறினார், இந்தியாவின் பெல்லாரி ஆயர் ஹென்ரி டி சூசா.

ஆசிய இளையோர் நாள் நிகழ்வில் கலந்துகொள்ளும் பிரதிநிதிகளுக்கு, இவ்வெள்ளியன்று திருப்பலி நிறைவேற்றி, மறையுரையாற்றிய ஆயர், ஹென்ரி டி சூசா அவர்கள், பன்மைத்தன்மையில் ஒற்றுமை என்பது பற்றி வலியுறுத்தினார்.

இரு நாடுகளுக்கு இடையேயுள்ள அழகு மற்றும், வேறுபாடுகள் பற்றி மறையுரையில் எடுத்துச்சொன்ன பெல்லாரி ஆயர், மக்கள், மொழிகள், கலாச்சாரங்கள், மதங்கள் போன்றவை பன்மைத்தன்மையைக் குறித்து நிற்கின்றன என்றும், வாழ்வின் எல்லாக் கதவுகளையும் திறப்பதற்கு, ஒற்றுமையைச் சாவியாகக் கொண்டிருக்க வேண்டுமென்றும், ஆசிய இளையோரிடம் கூறினார்.

இந்தியாவின் அறுபது கோடிக்கு மேற்பட்ட இளையோரின் வாழ்த்துக்களையும் தெரிவித்த ஆயர், ஹென்ரி டி சூசா அவர்கள், ஆசியாவின் அமைதி மற்றும் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக, வளர்ந்துவரும் சமய பயங்கரவாதத்தை முறியடிக்க, பொறுப்புணர்வோடு செயல்படுமாறும் கேட்டுக்கொண்டார்.

இளையோரின் திறமைகள், சக்திகள், கற்பனைகள், தலைமைத்துவம் ஆகியவை, திருஅவைக்கும், ஆசியாவுக்கும் தேவைப்படுகின்றன என்றும் கூறினார், ஆயர் ஹென்ரி டி சூசா.

யோக்யகார்த்தாவில், ஆகஸ்ட் 2, இப்புதனன்று ஆரம்பித்த 7வது ஆசிய இளையோர் நாள், ஆகஸ்ட் 6, இஞ்ஞாயிறோடு நிறைவடையும். இந்நிகழ்வில் 22 ஆசிய நாடுகளிலிருந்து பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.