2017-08-04 15:09:00

வெனிசுவேலா நெருக்கடிநிலை குறித்து, திருப்பீடம் ஆழ்ந்த கவலை


ஆக.04,2017. தென் அமெரிக்க நாடான வெனிசுவேலாவில், நாளுக்கு நாள் மோசமடைந்துவரும் நெருக்கடிநிலை குறித்து, திருப்பீடம் மிகுந்த கவலை கொண்டுள்ளது என, இவ்வெள்ளியன்று திருப்பீட செயலகம் வெளியிட்ட அறிக்கை கூறுகின்றது.

வெனிசுவேலா நெருக்கடிநிலை குறித்து நேரடியாகவும், திருப்பீட செயலகம் வழியாகவும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் அறிந்து வருகின்றார் என்றும், அந்நாட்டின் மனித, சமூக, அரசியல், பொருளாதார மற்றும் ஆன்மீக நிலைகள் குறித்து மிகவும் கவலையடைந்து, அந்நாட்டுக்காக அவர் தொடர்ந்து செபித்து வருகின்றார் என்றும், அவ்வறிக்கை மேலும் கூறுகிறது.

வெனிசுவேலா நாட்டில், அனைத்து அரசியல்வாதிகளும், குறிப்பாக, அரசும், மனித உரிமைகளையும், மக்களின் அடிப்படை சுதந்திரங்களையும், தற்போதைய அரசியலமைப்பையும் முழுவதும் மதித்து நடக்குமாறும் திருப்பீடம் அழைப்பு விடுப்பதாக, அவ்வறிக்கை கூறுகிறது.

வெனிசுவேலாவில் புதிய சட்டமன்றம் இவ்வெள்ளியன்று உருவாக்கப்படும் எனக் கூறப்பட்டுள்ளவேளை, இந்தச் சட்டமன்றம், அரசுத்தலைவர் நிக்கோலஸ் மாதூரோ (Nicolas Maduro) அவர்களின் சர்வாதிகார ஆட்சியை நிலைநிறுத்த உதவும் என, அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.