2017-08-03 15:05:00

Knights of Columbus அமைப்புக்கு திருத்தந்தை வாழ்த்து மடல்


ஆக.03,2018. திருஅவையின் இதயமாக விளங்கும் இறையன்பு அனுபவம், Knights of Columbus அமைப்பை உருவாக்க வழிவகுத்தது என்று திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இவ்வமைப்பினருக்கு அனுப்பியுள்ள ஒரு வாழ்த்து மடலில் கூறியுள்ளார்.

ஆகஸ்ட் 1 முதல் 3ம் தேதி முடிய, அமெரிக்க ஐக்கிய நாட்டின் செயின்ட் லூயிஸ் நகரில், Knights of Columbus அமைப்பினரால் நடத்தப்பட்ட 135வது உச்சி மாநாட்டிற்கு, திருத்தந்தையின் வாழ்த்துக்களை, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள் அனுப்பியுள்ளார்.

இயேசு வழங்கிய உவமைகளில் ஒன்றான கடுகு விதையைப் போல, சிறிதாகத் துவக்கப்பட்ட Knights of Columbus அமைப்பு, இன்று உலகெங்கும் பரவி, கத்தோலிக்கத் திருஅவைக்கு உன்னத பணிகளைப் புரிந்துவருகிறது என்று, திருத்தந்தை இம்மடலில் குறிப்பிட்டுள்ளார்.

Knights of Columbus அமைப்பின் தலைமைத் தளபதியான திருவாளர் கார்ல் ஆன்டர்சன் அவர்களுக்கு திருத்தந்தை அனுப்பியுள்ள இம்மடலில் "இறைவனின் அன்பிலும், சக்தியிலும் முழுமையாக நம்பிக்கை கொண்டு" என்று, இந்த மாநாட்டிற்கு தெரிவு செய்யப்பட்டுள்ள மையக்கருத்தைப் பாராட்டியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவனின் அன்பு ஒன்றே நம் வாழ்வை வழிநடத்தும் உந்து சக்தியாக அமைந்துள்ளது என்று கூறினார்.

திருமணத்தின் புனிதத்தையும், குடும்ப வாழ்வின் மகிழ்வையும் Knights of Columbus அமைப்பினர், எப்போதும் முன்னிறுத்தி அவற்றைக் காப்பதற்குப் பாடுபட்டு வருவதையும், திருத்தந்தை தன் மடலில் சிறப்பாகக் குறிப்பிட்டுள்ளார்.

புலம்பெயர்ந்தோரின் துயர் துடைக்க, Knights of Columbus அமைப்பினர் உருவாக்கியுள்ள சிறப்பு நிதி உதவி, இவ்வமைப்பினரின் அர்ப்பண உணர்வை வெளிப்படுத்துகிறது என்று  திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் இம்மடலில் பாராட்டியுள்ளார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.