2017-08-02 15:23:00

மன்னிப்பு மனிதர்களுக்கு எப்போதும் தேவைப்படும் ஓர் அருள்


ஆக.02,2018. மன்னிப்பு மனிதர்கள் அனைவருக்கும் எப்போதும் தேவைப்படும் ஓர் அருள் என்று, கீழை வழிபாட்டு முறை பேராயத்தின் தலைவர், கர்தினால் லியோனார்தோ சாந்த்ரி அவர்கள், இச்செவ்வாயன்று வழங்கிய ஒரு மறையுரையில் கூறினார்.

இத்தாலியின் வடகிழக்குப் பகுதியில், வெனிஸ் நகரையொட்டி அமைந்துள்ள பிபியோனே (Bibione) என்ற நகரில், விண்ணேற்பு மரியா ஆலயத்தில், ஆகஸ்ட் 1 முதல் 16 முடிய நடைபெறும் மன்னிப்பு நாட்களின் துவக்கத் திருப்பலியை இச்செவ்வாய் மாலை நிகழ்த்திய கர்தினால் சாந்த்ரி அவர்கள், தன் மறையுரையில், அசிசி நகர் மன்னிப்பு குறித்தும் பேசினார்.

மன்னிப்பும், இரக்கமும், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் தலைமைப்பணியின் முக்கிய கூறுகள் என்பதை தன் மறையுரையில் சுட்டிக்காட்டிய கர்தினால் சாந்த்ரி அவர்கள், இந்த மன்னிப்பு நாட்களில், இவ்வாலயத்தின் கதவுகளை புனிதக் கதவுகளாக திருத்தந்தை அறிவித்துள்ளதை எடுத்துரைத்தார்.

திருத்தந்தை 15ம் பெனடிக்ட் அவர்கள், முதல் உலகப்போரைக் கண்டனம் செய்து வெளியிட்ட மடல், 1917ம் ஆண்டு, 1ம் தேதி வெளியானதை தன் மறையுரையில் குறிப்பிட்ட கர்தினால் சாந்த்ரி அவர்கள், இம்மடல் எழுதப்பட்டதன் நூறாம் ஆண்டு நிறைவுறும் வேளையில், மன்னிப்பின்றி தவிக்கும் இவ்வுலகிற்காக செபிக்கும்படி அழைப்பு விடுத்தார்.

'பிபியோனே மன்னிப்பு' என்ற பெயரில் ஆகஸ்ட் 1 முதல் 16ம் தேதி முடிய நடைபெறும் சிறப்பு நாள்களில், ஐரோப்பாவின் பல நாடுகளைச் சேர்ந்த விசுவாசிகள் பங்கேற்று வருகின்றனர் என்று, விண்ணேற்பு மரியா பங்குத்தள அறிக்கையொன்று கூறுகிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.