2017-08-02 15:48:00

பாசமுள்ள பார்வையில்....., : முடக்கப்பட்ட குழந்தைகளின் உலகம்


தன் மகள் வழிப்பேரன், திண்ணையில் தன் கண்முன்னாலேயே விளையாடிக் கொண்டிருக்க, பக்கத்து வீட்டுப் பெண்மணியுடன் அமர்ந்து பேசிக்கொண்டிருந்தார், அம்புஜம் பாட்டி. அந்த 2 வயது சிறுவன், எதையோ எடுக்க அவசரமாக ஓடியதில், கால் தடுமாறி, கீழே விழுந்தான். அடி எதுவும் பலமாக படவில்லை என்பதை, தூரத்திலிருந்தேப் பார்த்து முடிவுசெய்த பாட்டி, தன் கண்களை இறுக மூடிக்கொண்டு அமர்ந்திருந்தார். சற்று எழுந்து, தன் பாட்டியைப் பார்த்த சிறுவன்,  தன் விளையாட்டைத் தொடர்ந்தான். 'ஏன் பாட்டி, பிள்ளையைப்போய் தூக்கி விட்டிருக்கலாமே' என்றார் பக்கத்து வீட்டுப் பெண்மணி. 'என் பேரன் மீது எனக்கு அளவு கடந்த பாசம் இருக்கத்தான் செய்கிறது. ஆனால், குழந்தைகளைப் பொத்தி, பொத்தி வளர்ப்பதில் எனக்கு நம்பிக்கையில்லை. தெருவில் இறங்கி விளையாடக்கூடாதாம், புழுதி ஒத்துக்காதாம்.  எந்தக் குழந்தை இன்று நம் பாராம்பரிய விளையாட்டுக்களை விளையாடுகின்றது? பின் எப்படி அவர்களுக்கு மனவுறுதியும் உடலுறுதியும் கிட்டும்? இன்று குழந்தைகளிடையே போட்டிகளைத்தான் நாம் வளர்த்துக் கொண்டிருக்கிறோம். அவனைவிட நீ அதிக மார்க் வாங்கி காண்பிக்கவேண்டும் என, பாடம், படிப்பு, டியூஷன், மனப்பாடம், மதிப்பெண், என இவை போதும் என்ற மனநிலையை வளர்த்துக்கொண்டிருக்கிறோம். நாம் கதை சொல்லி சோறு ஊட்டினோம். குழந்தைகள் நம் முகத்தைப் பார்த்துக்கொண்டு சோறுண்டன. இன்றோ தொலைக்காட்சியைப் போட்டுவிட்டு, சோறூட்டுகிறார்கள். கதைகள் சொல்லி குழந்தைகளில் ஓர் அழகான கற்பனை உலகம் உருவாக உதவிய காலங்கள் இன்றில்லை. நிலா நிலா ஓடிவா, என்ற இயற்கை பந்தங்களுக்கும் இன்று நேரமில்லை. எதை எதைச் செய்யவேண்டும் என கற்றுக் கொடுத்தோம் ஒரு காலத்தில். ஆனால் இன்றோ, குழந்தைகள் என்னச் செய்கிறார்கள் என்பதை கவனிக்க நேரமின்றி, செய்தபின், அதைச் செய்யாதே என கண்டிப்பதில் என்ன பயன் இருக்கப்போகிறது? செய்த தவறை புரிந்துகொள்ள குழந்தைகளுக்கு வாய்ப்பளிக்கிறோமா என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்?'.  இவ்வாறு, பாட்டி பேசிக்கொண்டேச் செல்ல, அந்த காலத்து இரண்டாம் வகுப்பு ஆசிரியராக இருந்த பாட்டிக்குள், இத்தனை ஏக்கம் இருக்கிறதா என, வாயடைத்துப்போய் நின்றார், பக்கத்து வீட்டுப் பெண்மணி.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.