2017-08-02 15:43:00

ஜலந்தரில் இந்திய அருள்பணியாளர்களின் ஆண்டுக்கூட்டம்


ஆக.02,2018. இந்திய அருள்பணியாளர்களின் திருத்தூதுப்பணி அமைப்பு, பஞ்சாப் மாநிலத்தின் ஜலந்தர் நகரில், ஆகஸ்ட் 1ம் தேதி முதல், 4ம் தேதி முடிய தன் ஆண்டுக்கூட்டத்தை நடத்தி வருகிறது.

"அருள்பணியாளர்கள் அமைப்பின் வாழ்வும், பணியும்: நிகழ் உண்மைகளும், வாய்ப்புக்களும்" என்ற மையக்கருத்துடன் நடைபெறும் இக்கூட்டத்தில், அருள்பணியாளர்கள், ஒருவருக்கொருவர் எவ்விதம் உதவிகள் செய்யமுடியும் என்பது குறித்த கருத்துப்பரிமாற்றங்கள் நடைபெறுகின்றன என்று இக்கூட்டத்தை ஒருங்கிணைக்கும் அருள்பணி டொனால்டு டிசூசா அவர்கள், ஆசிய செய்தியிடம் கூறினார்.

பங்குத்தளங்களிலும், நிறுவனங்களிலும் பணியாற்றும் அருள்பணியாளர்கள், பிரச்சனைகளைச் சந்திக்கும்போது, ஒருவருக்கொருவர் உறுதுணையாக இருக்கவும், தனிமையை உணராமல் வாழவும் வேண்டிய வழிமுறைகள் இக்கூட்டத்தில் கலந்தாலோசிக்கப்படுவதாக அருள்பணி டிசூசா அவர்கள் கூறினார்.

இந்திய ஆயர் பேரவையின் ஆதரவைப் பெற்றுள்ள இவ்வமைப்பில், ஏறத்தாழ, 15,000 மறைமாவட்ட அருள்பணியாளர்களும், 10,000 துறவு சபை அருள்பணியாளர்களும் உறுப்பினர்களாக உள்ளனர் என்று ஆசிய செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.