2017-08-02 15:14:00

"அசிசி நகர் மன்னிப்பு" - 8ம் நூற்றாண்டு நிறைவுத் திருப்பலி


ஆக.02,2018. அசிசி நகரில் அமைந்துள்ள வானதூதர்களின் அரசியான மரியன்னை பசிலிக்காவுக்கு வரும் அனைவரும் பரிபூரண பலனைப் பெற முடியும் என்ற அனுமதியை திருத்தந்தை வழங்கியதும், அசிசி நகர் புனித பிரான்சிஸ், தன் மகிழ்வை அடக்கமுடியாமல், "நான் அனைவரையும் விண்ணகத்திற்கு அனுப்ப விழைகிறேன்" என்று அறிக்கையிட்டதை, திருப்பீட உயர் அதிகாரி ஒருவர், தன் மறையுரையில் குறிப்பிட்டார்.

1216ம் ஆண்டு, ஆகஸ்ட் 2ம் தேதி, அசிசி நகர் புனித பிரான்சிஸ், Porziuncola சிற்றாலயத்தில் பெற்ற பரவச நிலையையடுத்து, மக்களின் பாவங்களைப் போக்கும் பரிபூரண பலனை பெற்றுத்தரும் முயற்சியை மேற்கொண்டு, திருத்தந்தையின் ஒப்புதலையும் பெற்ற அந்நிகழ்வின் 8ம் நூற்றாண்டு கொண்டாட்டங்கள், கடந்த ஓராண்டளவாய் அசிசி நகரில் நிகழ்ந்து வருகின்றன.

இக்கொண்டாட்டங்களின் நிறைவுத் திருப்பலியை, ஆகஸ்ட் 2, இப்புதனன்று காலை 11 மணிக்கு, திருப்பீடச் செயலர், கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், தலைமையேற்று நடத்தினார்.

"அசிசி நகர் மன்னிப்பு" என்ற இவ்விழாவில் கலந்துகொள்ளும் அனைவருக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன் சிறப்பான வாழ்த்துக்களையும், ஆசீரையும் அனுப்பியுள்ளார் என்று, கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையின் துவக்கத்தில் குறிப்பிட்டார்.

எளிமையை தன் வாழ்வின் உயிர் நாடியாகக் கொண்டு வாழ்ந்ததால், நம் அனைவரின் மனச்சான்றுக்கு ஒரு சவாலாக விளங்கும் புனித பிரான்சிஸ், இங்கு நம்மை அழைத்து வந்தமைக்காக இறைவனுக்கு நன்றி கூறுவோம் என்று கர்தினால் பரோலின் அவர்கள், தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

'மக்களை விண்ணகத்திற்கு அனுப்பிவைக்கிறேன்' என்று புனித பிரான்சிஸ் அறிக்கையிட்டது, திருஅவையின் ஒரு முக்கியப் பணியை மீண்டும் நமக்கு நினைவுறுத்துகிறது என்று கர்தினால் பரோலின் சுட்டிக்காட்டினார்.

விண்ணையும் மண்ணையும் இணைக்கும் ஒரு பாலமாக அமைந்து, வறியோர், சமுதாயத்தின் கடைநிலையில்இருப்போர், உட்பட அனைவரையும் இறைவனிடம் அழைத்துச் செல்வது, திருஅவையின் பணி என்பதை, Porziuncola சிற்றாலயம் நமக்கு மீண்டும் நினைவுறுத்துகிறது என்று, கர்தினால் பரோலின் அவர்கள் தன் மறையுரையில் எடுத்துரைத்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.