2017-08-01 14:52:00

பாசமுள்ள பார்வையில்: கையளவு இறைச்சிக்காக...


"முகநூலில் வெளியான ஒரு டுவிட்டர் செய்திக்காக, அல்லது, கையளவு இறைச்சிக்காக ஒருவரையொருவர் வெறுப்பது இவ்வளவு எளிதாகிவிட்டதோ?" என்ற கேள்வியுடன், 23 வயது நிறைந்த இரு இளம்பெண்கள், டில்லி சாலைகளில், அன்பைப் பரப்பும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

சபிக்கா நக்வி (Sabika Naqvi) என்ற இளம்கவிஞர், டில்லியின் முக்கியமான சாலைகளின் ஓரமாக நின்று, கவிதை வரிகளை சப்தமாக வாசிக்க, அனன்யா சாட்டர்ஜி (Anannya Chatterjee) என்ற இளம் நடனக்கலைஞர், அக்கவிதை வரிகளுக்கு ஏற்றதுபோல், அபிநயங்களுடன் நடனம் ஆடுகிறார். சபிக்கா வாசித்த ஒரு கவிதையின் வரிகள், இதோ:

அன்பு காட்டுவது மிகக் கடினமாகவும்,

வெறுப்பது மிக எளிதாகவும் மாறியது ஏன்?

சாலையில், ஒருவரோடு அன்பைப் பகிர்வது, கடினமாகிவிட்டது;

ஆனால், ஒருவரை உயிரோடு எரிப்பது, எளிதாகிப்போனது.

நாம் அதிக அன்பு காட்டுகிறோம்.

ஆனால், நம்மைப்போல் இருப்பவரிடம் மட்டுமே,

நமது மதம், நமது சாதியைச் சார்ந்தவரிடம் மட்டுமே,

நம் கடவுளை நம்புகிறவரிடம் மட்டுமே... அவ்வளவுதான்.

எது உண்மையிலேயே எளிதானது என அறிய விழைகிறேன்...

அன்பா? வெறுப்பா?

மார்பில் கத்தியால் குத்துவதா? மார்போடு அணைப்பதா?

புன்னைகை புரிவதா? கெட்டவார்த்தைகளைக் கக்குவதா?

நாட்டிலிருந்து ஒருவரைத் தூக்கி எறிவதா? அல்லது, நாட்டுக்குள் வரவேற்பதா?

உன் ஆன்மாவைக் கேள்:

உன் உடல் மனிதத்தன்மையுடன் உள்ளது;

உன் ஆன்மாவும் மனிதத்தன்மையுடன் உள்ளதா?

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.