2017-08-01 15:11:00

தாய்களையும் சேய்களையும் காக்கும் தாய்ப்பால்


ஆக.,01,2017. தாய்ப்பால் கொடுப்பதன் வழியாக, குழந்தைகளும் தாய்களும் காப்பாற்றப்படும் நிலை இருப்பினும், உலகில் தாய்ப்பால் ஊட்டுவோரின் எண்ணிக்கை குறைந்து வருவதாக, கவலையை வெளியிட்டுள்ளன, ஐ.நா. நல அமைப்புக்கள்.

யுனிசெஃப் எனும் குழந்தைகள் அவசரகால நிதி அமைப்பும், உலக நலவாழ்வு அமைப்பும் இணைந்து வெளியிட்டுள்ள அறிக்கையில், தாங்கள் ஆய்வு செய்த 194 நாடுகளில், 6 மாதங்களைத் தாண்டிய சிசுக்களுள் 40 விழுக்காட்டிற்கே தாய்ப்பால் ஊட்டப்படுவதாக கூறுகிறது.

இந்த 194 நாடுகளில், 23 நாடுகளிலேயே 60 விழுக்காட்டிற்கும் மேற்பட்ட குழந்தைகளுக்கு, தாய்ப்பால் ஊட்டப்படுவதாக மேலும் இவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

தாய்ப்பால் கொடுக்கப்படாத குழந்தைகள், வயிற்றுப்போக்கு மற்றும் மார்புசளிக் காய்ச்சலால் துன்புறுவது மட்டுமல்ல, தாய்ப்பால் கொடுக்காத அன்னையர்க்கு, மார்பு மற்றும், கர்ப்பப்பை புற்றுநோய் வரும் ஆபத்து உள்ளதையும் சுட்டிக்காட்டும் ஐ.நா. அமைப்புகளின் இந்த அறிக்கை, சீனா, இந்தியா, இந்தோனேசியா, மெக்சிகோ மற்றும் நைஜீரியாவில், தாய்ப்பால் கொடுப்பதற்கு போதிய ஊக்கம் வழங்கப்படாததால் ஒவ்வோர் ஆண்டும் இரண்டு இலட்சத்து முப்பத்தாறாயிரம் குழந்தைகள்வரை உயிரிழப்பதாகவும் தெரிவிக்கிறது.

தாய்ப்பால் ஊட்டுவதன் அவசியம் குறித்து வலியுறுத்திய WHO எனும் உலக நலவாழ்வு அமைப்பின் இயக்குனர் Tedros Adhanom Ghebreyesus அவர்கள், குழந்தைகளின் முதல் தடுப்பு மருந்தாகச் செயல்படும் தாய்ப்பால், நோயிலிருந்து மட்டும் அவர்களைக் காப்பாற்றவில்லை, மாறாக, அவர்கள் வளர்வதற்கான ஊட்டச்சத்துக்களையும் வழங்குகிறது என்று தெரிவித்தார். 

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.