2017-08-01 15:45:00

உள்ளூர் குடும்பங்களில் ஆசிய இளையோருக்கு வரவேற்பு


ஆக.01,2017. இந்தோனேசியாவின் சேமராங் உயர்மறைமாவட்டத்தில் நடைபெற்றுவரும் 7வது ஆசிய இளையோர் தினம், தலத்திருஅவைக்கு மாபெரும் ஆசீர்வாதம் என, சேமராங் உயர்மறைமாவட்டத்தின் பேராயர், Robertus Rubiyatmoko அவர்கள், ஆசியச் செய்தியிடம் கூறியுள்ளார்.

சேமராங் உயர்மறைமாவட்டத்தின், 2016ம் ஆண்டு முதல், 2035ம் ஆண்டு வரையிலான மேய்ப்புப்பணித் திட்டத்தை, உள்ளூர் கத்தோலிக்க சமுதாயம் நடைமுறைப்படுத்துவதற்கு, இந்த இளையோர் தினம் சவாலாக உள்ளது என்றும் தெரிவித்தார், பேராயர், Robertus.

இளையோருக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பதன் வழியாக, கத்தோலிக்கத் திருஅவையின் வாழ்வுக்கும், வளர்ச்சிக்கும், இளையோர் பெரும்பங்கு ஆற்ற முடியும் எனவும் கூறினார், பேராயர், Robertus.

மேலும், இந்தோனேசியாவின் பாலி தீவில், கம்போடியா, மலேசியா மற்றும் இந்தோனேசியாவைச் சேர்ந்த 150க்கும் மேற்பட்ட இளையோர் பிரதிநிதிகளுக்கு, உள்ளூர் குடும்பங்கள் தங்கள் வீடுகளில் தங்கும் வசதிகளைச் செய்து கொடுத்துள்ளன.

7வது  ஆசிய இளையோர் தினத்தின் முக்கிய நிகழ்வுகள், ஆகஸ்ட் 2, இப்புதன் முதல், ஆகஸ்ட் 6, வருகிற ஞாயிறுவரை யோக்யகார்த்தாவில் நடைபெறுகின்றன.

ஜூலை 31ம் தேதி தொடங்கிய 7வது  ஆசிய இளையோர் தினத்தில், 21 நாடுகளின் இரண்டாயிரத்துக்கு மேற்பட்ட இளையோர் பிரதிநிதிகள் கலந்துகொள்கின்றனர். 

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.