2017-07-31 16:15:00

புனித‌ நிக்கோலாசின் திருப்ப‌ண்ட‌ங்க‌ள், இத்தாலி திரும்பின


ஜூலை,31,2017. இர‌ண்டு மாதங்க‌ளாக‌ இர‌ஷ்யாவில் ப‌ய‌ண‌ம் மேற்கொண்டிருந்த‌ புனித‌ நிக்கோலாஸ் அவர்களின் திருப்ப‌ண்ட‌ங்க‌ள், க‌ட‌ந்த‌ வார‌ இறுதியில் இத்தாலியின் பாரி ந‌க‌ர் திரும்பின‌.

1087ம் ஆண்டிலிருந்து இத்தாலியின் பாரி நக‌ரில் போற்றிப் பாதுகாக்க‌ப்ப‌ட்டு வ‌ந்த, துருக்கியின் Myra நக‌ரைச் சேர்ந்த‌ புனித‌ நிக்கோலாஸ் அவர்களின் திருப்ப‌ண்ட‌ங்க‌ள், இவ்வாண்டு மே மாதம் 21ம் தேதி இரஷ்யாவுக்கு எடுத்துச் செல்லப்பட்டு, அங்குள்ள ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்களின் பார்வைக்கு வைக்கப்பட்டன.

கத்தோலிக்கர்கள், ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவ சபையினர், பிரிந்த கிறிஸ்தவ சபையினர் என ஏறத்தாழ அனைத்துக் கிறிஸ்தவர்களாலும் மதிக்கப்படும் புனித நிக்கோலாஸ் அவர்களின் திருப்பண்டங்களை, கடந்த இரண்டு மாதங்களில் 20 இலட்சத்துக்கும் மேற்பட்ட இரஷ்ய ஆர்த்தடாக்ஸ் கிறிஸ்தவர்கள் பார்வையிட்டுள்ளனர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஏழைக்குடும்பங்களுக்கு உதவுவதையே தன் பணியாகக் கொண்டிருந்த புனித நிக்கோலாஸ் அவர்களை மனதில் கொண்டே, கிறிஸ்துமஸ் தாத்தா, அதாவது, ‘சான்டா கிளாஸ்’ என்ற கற்பனை உருவம் உருவாக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

இரு மாதங்கள் இரஷ்யாவில் பயணம் செய்த இத்திருப்பண்டங்களை, இத்தாலியின் பாரி நகருக்குக் கொண்டுவருவதற்கு சென்ற, கிறிஸ்தவ ஒன்றிப்பு திருப்பீட அவையின் தலைவர், கர்தினால் ‌ Kurt Koch அவ‌ர்க‌ளும், பாரியின் பேராய‌ர் Francesco Cacucci அவ‌ர்க‌ளும், க‌ட‌ந்த‌ வெள்ளிய‌ன்று, ஆர்த்த‌டாக்ஸ் கிறிஸ்த‌வ‌ர்களுட‌ன் இணைந்து இத்திருப்ப‌ண்ட‌ங்க‌ள் முன்பு செபித்த‌துட‌ன், அவற்றை பாரி ந‌க‌ருக்குக் கொண‌ர்ந்த‌ன‌ர்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.