2017-07-31 16:03:00

ஏற்றுக்கொள்ளப்பட்டவைகளாக மாறிவருகின்றன, தீமைகள்


ஜூலை,31,2017. மனிதர்களை வியாபாரப்பொருள்களாக கடத்தும் அவல நிலைகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆதரவு வழங்கவும், இத்தகைய கடத்தல்களில் ஈடுபடுவோர் மனம் திருந்தவும் செபிக்குமாறு அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

மனிதர்களை வியாபாரப் பொருட்களாக கடத்தப்படுவதற்கு எதிரான நாள் இஞ்ஞாயிறன்று சிறப்பிக்கப்பட்டதைக் குறித்து, தன் ஞாயிறு மூவேளை செப உரைக்குப்பின் குறிப்பிட்ட திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மிகவும் மோசமான, கொடூரமான மற்றும் தண்டிக்கத்தக்க குற்றமான இந்நோய் குறித்து உலகம் அதிகக் கவலைப்படாமல் இருப்பதை சுட்டிக்காட்டி, தன் கவலையை வெளியிட்டார்.

ஒவ்வோர் ஆண்டும், பல ஆயிரக்கணக்கான அப்பாவி ஆண்களும் பெண்களும் குழந்தைகளும், அடிமைத் தொழில், பாலியல், உறுப்புத்திருட்டு ஆகிய கொடுமைகளுக்காகக் கடத்தப்படுகிறார்கள் என்று கூறியத் திருத்தந்தை, இவற்றை சாதாரண நிகழ்வுகளாக ஏற்றுக்கொண்டு இவ்வுலகம் செயல்படுவது, மிகவும் கவலை தருவதாக உள்ளது என்றார்.

இத்தகைய நிலைகளால் பாதிக்கப்பட்டோர் விடுதலை பெறவும், கடத்தல்களில் ஈடுபடுவோர் மனம் மாறவும் அன்னை மரியை நோக்கி அனைவரும் செபிப்போம் என்ற அழைப்பை முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், தூய பேதுரு வளாகத்தில் குழுமியிருந்த மக்களோடு இணைந்து, இக்கருத்துக்காக, 'அருள் நிறை மரியே' என்ற செபத்தைச் செபித்தார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.