2017-07-29 15:07:00

பாகிஸ்தானில் நீதி வெற்றி பெற்றுள்ளது, சிறுபான்மை தலைவர்கள்


ஜூலை,29,2017. பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் அவர்கள், ஊழல் குற்றச்சாட்டின்பேரில், உச்ச நீதிமன்றத்தால், அரசியல் வாழ்விலிருந்து தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளது, நீதிக்கு கிடைத்த வெற்றி என்று, அந்நாட்டின் பல்வேறு சிறுபான்மை சமயத் தலைவர்கள் கூறியுள்ளனர்.

பாகிஸ்தான் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்புக்குப்பின், பிரதமர் பதவியிலிருந்து நவாஸ் ஷெரீப் விலகியுள்ளவேளை, கத்தோலிக்கர் உட்பட, பல சமயத் தலைவர்கள் தங்கள் கருத்துக்களை வெளியிட்டுள்ளனர்.

இவ்விவகாரம் குறித்து, ஆசியச் செய்தியிடம் பேசிய, Faisalabad ஆயர் ஜோசப் அர்ஷத் அவர்கள், இந்த நாள் பாகிஸ்தானுக்குச் சோகமான நாளாக இருந்தபோதிலும், அரசியல் வாதிகளும், குடிமக்களும் அமைதி காக்க வேண்டுமென்று தான் அழைப்பு விடுப்பதாகத் தெரிவித்தார்.

நாட்டில் நிலவும் பதட்டநிலையை இராணுவம் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரும் என்று தான் நம்புவதாகவும் கூறிய ஆயர் அர்ஷத் அவர்கள், நீதி வெற்றிபெற வேண்டும் மற்றும், சட்டம் தனது வழியில் செல்ல வேண்டும் எனவும் கூறினார்.

1990களில் நவாஸ் ஷெரீப், இருமுறை பிரதமர் பதவி வகித்தபோது, சட்டவிரோத பணப் பரிமாற்றங்களில் ஈடுபட்டதாகவும், இலண்டனில் 4 அடுக்கு சொகுசு மாடி குடியிருப்புகள் வாங்கியதாகவும் ‘பானமா லீக்ஸ்’என்ற ஆவணக் கசிவில் தகவல் வெளியானது. இதைத் தொடர்ந்த விசாரணைகளின் முடிவில், அவரின் பிரதமர் பதவி பறிக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் : AsiaNews /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.