2017-07-29 14:32:00

ஐரோப்பாவுக்கு இன்றியமையாத பொறுப்பு உள்ளது,கர்தினால் பரோலின்


ஜூலை,29,2017. புலம்பெயர்ந்த மக்களைப் பொருத்தவரை, ஐரோப்பாவுக்குத் தவிர்க்க இயலாத பொறுப்பு உள்ளது என, திருப்பீடச் செயலர் கர்தினால் பியெத்ரோ பரோலின் அவர்கள், இவ்வெள்ளியன்று கூறினார்.

“Il Regno” (The Kingdom), அதாவது இறையாட்சி என்ற இத்தாலிய கத்தோலிக்க இதழுக்குப் பேட்டியளித்த, கர்தினால் பரோலின் அவர்கள், கடந்த ஜூன் 16ம் தேதி காலமான, ஜெர்மனியின் முன்னாள் சான்சிலர், ஹெல்மட் கோல் அவர்களின் தொலைநோக்கு கண்ணோட்டத்தைப் பாராட்டிப் பேசினார்.

ஹெல்மட் கோல் அவர்கள், ஐரோப்பிய ஜெர்மனியை அல்ல, ஐரோப்பியமயமான ஜெர்மனியை அமைப்பதற்கு விரும்பினார் என்றுரைத்த கர்தினால் பரோலின் அவர்கள், ஐரோப்பியர்களின் தேசியவாதம் என்ற சிந்தனை குறித்தும் எச்சரித்தார்.

தேசியவாதம் என்ற போக்கு, ஐரோப்பாவின் கலாச்சார மற்றும், சமயப் பிரச்சனைகளில் அடித்தளத்தைக் கொண்டிருக்கின்றது என்றும், இது, ஐரோப்பாவின் விழுமியங்கள் அழிவதற்குக் காரணமாக அமையும் என்றும், கூறினார் கர்தினால் பரோலின்.

சீனாவுக்கும், திருப்பீடத்திற்கும் இடையே இடம்பெற்றுவரும் கலந்துரையாடல் குறித்தும் பேட்டியில் குறிப்பிட்ட கர்தினால், இந்த உரையாடலில், ஏற்கனவே நேர்மறைத் தாக்கங்களைக் காண முடிகின்றது என்றும் தெரிவித்தார்.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.