2017-07-28 15:33:00

பிலிப்பீன்ஸ் மனித உரிமைகள் அவையை மூடுவதற்கு ஆயர்கள்...


ஜூலை,28,2017. பிலிப்பீன்ஸ் மனித உரிமைகள் அவையின் நடவடிக்கைகளை முடக்குவதற்கு, அரசுத்தலைவர் ரொட்ரிக்கோ துத்தெர்த்தே அவர்கள் திட்டமிட்டுவருவதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளனர், அந்நாட்டு கத்தோலிக்க ஆயர்கள்.

நாட்டின் மனித உரிமைகள் அவை, போதைப்பொருளுக்கு எதிராக அரசு மேற்கொண்டுவரும் நடவடிக்கையை குறைகூறி வருவதால், அதனை மூடுவதற்குத்  திட்டமிட்டிருப்பதாக, அரசுத்தலைவர் துத்தெர்த்தே அவர்கள், ஜூலை 24, இத்திங்களன்று நாட்டிற்கு ஆற்றிய உரையில் அறிவித்தார்.

அரசுத்தலைவரின் இத்திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள, Sorsogon ஆயர், Arturo Bastes அவர்கள், அரசுத்தலைவரின் இத்திட்டம் அறிவுடன் எடுக்கப்பட்டதல்ல என்று கூறினார்.

மேலும், இது குறித்து கருத்து தெரிவித்த ஓய்வுபெற்ற ஆயர், Teodoro Bacani அவர்கள், பிலிப்பீன்ஸ் அரசியலமைப்பால் உருவாக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வரும், மனித உரிமைகள் அவையை, அரசுத்தலைவர் அவ்வளவு எளிதாக மூடிவிட முடியாது என்று கூறினார்.

1987ம் ஆண்டின் அரசியலமைப்பை எழுதியவர்களுள் ஒருவரான ஆயர் Bacani அவர்கள், அரசுத்தலைவர் துத்தெர்த்தே அவர்கள், நல்ல அறிவுடன் செயல்படுவதற்கு செபிக்குமாறு, நாட்டு மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.