2017-07-27 15:37:00

இலங்கைப் பெண்மணிக்கு 2017 இரமோன் மகசேசே விருது


ஜூலை,27,2017. இந்தோனேசியாவில் பழங்குடியினரிடையே பணியாற்றியவர், இலங்கை உள்நாட்டுப் போரினால் பாதிக்கப்பட்டோருக்கென உழைக்கும் பெண்மணி, கம்போடியாவின் Angkor Wat நினைவுச்சின்னத்தைப் பாதுக்காக்க உழைக்கும் ஒரு ஜப்பான் நாட்டவர் உட்பட, ஆறுபேருக்கு இவ்வாண்டின் இரமோன் மகசேசே விருது அறிவிக்கப்பட்டுள்ளது என்று UCA செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆசியாவின் நொபெல் விருது என்று வழங்கப்படும் மகசேசே விருதினைப் பெறுவதற்கு, இந்தோனேசியாவின் Abdon Nababan, இலங்கையின் Gethsie Shanmugam, ஜப்பான் நாட்டு Yoshiaki Ishizawa, சிங்கப்பூரைச் சேர்ந்த Tony Tay, பிலிப்பின்ஸ் நாட்டைச் சேர்ந்த Lilia de Lima என்ற பெண்மணி, மற்றும் அந்நாட்டின் கல்வி சார்ந்த நாடகக் கழகத்தைச் சார்ந்தோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஆசிய நாடுகளில் தன்னலமற்ற சேவையில் ஈடுபட்டு சமுதாய மாற்றங்களைக் கொணர்வோருக்கென, பிலிப்பின்ஸ் முன்னாள் அரசுத்தலைவர் இரமோன் மகசேசே அவர்களின் நினைவாக, இவ்விருது 1957ம் ஆண்டுமுதல் வழங்கப்பட்டு வருகிறது.

ஆகஸ்ட் 31ம் தேதி, மணிலாவில் நடைபெறும் ஒரு விழாவில், இந்த விருது வழங்கப்படும்.

இதுவரை இவ்விருதை, 318 பேர் பெற்றுள்ளனர் என்பதும், கடந்த ஆண்டு வழங்கப்பட்ட இரமோன் மகசேசே விருதைப்பெற்ற Bezwada Wilson என்ற இந்தியர் தலித் கிறிஸ்தவர், மனிதக் கழிவை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு எதிராகப் போராடி வருபவர் என்பதும் குறிப்பிடத்தக்கன.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.