2017-07-26 15:21:00

தாத்தா பாட்டியின் முக்கியத்துவம் குறித்து திருத்தந்தை


ஜூலை,26,2017. "ஒவ்வொரு சமூகத்தின் மிக அவசியத் தேவையாக இருக்கும், மனித, மற்றும் சமய பாரம்பரியத்தை, அடுத்தத் தலைமுறைக்கு வழங்க, ஒவ்வொரு குடும்பத்திலும், தாத்தாவும், பாட்டியும், முக்கியமாக விளங்குகின்றனர்" என்ற சொற்களை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஜூலை 26, இப்புதனன்று தன் டுவிட்டர் செய்தியாக வெளியிட்டார்.

அன்னை மரியாவின் பெற்றோரும், இயேசுவின் தாத்தா, பாட்டியுமான புனிதர்கள் சுவக்கீம், அன்னா ஆகிய இரு புனிதர்களின் திருவிழா, ஜூலை 26ம் தேதி சிறப்பிக்கப்பட்டதை நினைவுகூரும் வகையில், திருத்தந்தையின் டுவிட்டர் செய்தி அமைந்திருந்தது.

மேலும், புனிதர்கள் சுவக்கீம், அன்னா திருநாளையொட்டி, புனித பேதுரு பசிலிக்கா பேராலயத்தின் தலைமை அருள்பணியாளரான கர்தினால் ஆஞ்செலோ கோமாஸ்த்ரி, உலக ஆயர்கள் மாமன்ற செயலரான கர்தினால் லொரென்சோ பால்திஸ்ஸேரி ஆகியோர், வத்திக்கானில் அமைந்திருக்கும் பங்குக்கோவிலான, புனித அன்னா ஆலயத்தில், சிறப்புத் திருப்பலிகள் நிறைவேற்றினர்.

இளையோரை மையப்படுத்தி, 2018ம் ஆண்டு, வத்திக்கானில் நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றம், மற்றும், 2019ம் ஆண்டு பானமா நாட்டில் நடைபெறவிருக்கும் உலக இளையோர் நாள் ஆகிய முக்கிய நிகழ்வுகளுக்காக, இந்தத் திருப்பலிகளின்போது சிறப்பான செபங்கள் கூறப்பட்டன என்று, புனித அன்னா பங்குக்கோவிலின் அறிக்கை கூறியுள்ளது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.