2017-07-26 15:53:00

சந்திக்கும் கலாச்சாரத்தின் வழியே, அமைதி காண...


ஜூலை,26,2017. சந்திக்கும் கலாச்சாரத்தின் வழியே, அமைதியின் பாதையை நாம் காண்போம் என்று, அகில உலக காரித்தாஸ் அமைப்பின் தலைவர், கர்தினால் லூயிஸ் அந்தோனியோ தாக்லே அவர்கள், அண்மையில் வெளியிட்டுள்ள ஒரு மடலில் கூறியுள்ளார்.

நாடுவிட்டு நாடு செல்லும் மக்களின் எண்ணிக்கை, உலகெங்கும் அதிகரித்துவரும் சூழலில், புலம்பெயர்ந்தோர், மற்றும் குடியேற்றதாரர் மீது, அச்சமும், சந்தேகங்களும் கூடிவருவதை தடுக்கும் ஒரு முயற்சியாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், செப்டம்பர் 27ம் தேதி, "பயணத்தைக் பகிர்வோம்" என்ற கொள்கைப்பரப்பு முயற்சியைத் துவக்கி வைக்கிறார்.

திருத்தந்தையின் இந்த முயற்சியில், உலகெங்கும் உள்ள அனைத்து கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்களும் பங்கேற்க, கர்தினால் தாக்லே அவர்கள் அழைப்பு மடல் ஒன்றை வெளியிட்டுள்ளார்.

உலகினர் அனைவருமே பயணிகள் என்றும், தற்போதைய சமுதாய, அரசியல் பிரச்சனைகளால் தங்கள் சொந்த நாட்டைவிட்டு வெளியேறும் கட்டாயத்திற்கு தள்ளப்பட்டுள்ள மக்களுடன் நாமும் பரிவுடன் பயணம் செய்வதற்கு, திருத்தந்தையின் முயற்சி நம்மை அழைக்கிறது என்று, கர்தினால் தாக்லே அவர்கள், தன் மடலில் குறிப்பிட்டுள்ளார்.

உலகெங்கும் பணியாற்றும் 165 காரித்தாஸ் அமைப்புக்களும், இன்னும் ஏனைய கத்தோலிக்கப் பிறரன்பு அமைப்புக்களும் இணைந்து, இந்த அன்புச் சங்கிலியை உருவாக்குவோம் என்று, கர்தினால் தாக்லே அவர்களின் மடல் அழைப்பு விடுக்கிறது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.