2017-07-26 16:03:00

இஸ்ரேல் பாலஸ்தீனாவுக்கிடையே அமைதி நிலவ...


ஜூலை,26,2017. இஸ்ரேல் பாலஸ்தீன நாடுகளிடையே அமைதி நிலவவேண்டும் என்ற விண்ணப்பம், மீண்டும், மீண்டும், உலக அவையில் எழுப்பப்பட்டாலும், இந்த அமைதி உறுதியாகும்வரை, இதைக்குறித்து நாம் பேசியாகவேண்டும் என்று, வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறினார்.

ஐ.நா. அவை தலைமையகத்தில், ஐ.நா.பாதுகாப்பு அவை, இஸ்ரேல் பாலஸ்தீனா குறித்து, இச்செவ்வாயன்று ஏற்பாடு செய்திருந்த கூட்டத்தில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்ற அருள்பணி சீமோன் கஸ்ஸாஸ் அவர்கள், இவ்வாறு கூறினார். 

இஸ்ரேல், பாலஸ்தீன மோதல்கள் குறித்த கருத்துக்கள், கீறல் விழுந்த ஒலித்தட்டைப்போல மீண்டும் மீண்டும் ஐ.நா. அவையில் ஒலித்து வருகின்றது என்று குறிப்பிட்ட, அருள்பணி கஸ்ஸாஸ் அவர்கள், இக்கருத்து அடிக்கடி பேசப்படுவதால், இதன் முக்கியத்துவம் குறைந்துபோகும் ஆபத்து உள்ளது என்று எடுத்துரைத்தார்.

இஸ்ரேல் மற்றும் பாலஸ்தீனா இரண்டும், இருவேறு நாடுகளாக விளங்கவேண்டும் என்றும், உலக அவையால் வரையறுக்கப்பட்டுள்ள எல்லைகளை இவ்விரு நாடுகளும் மதிக்கவேண்டும் என்றும் திருப்பீடம் வலியுறுத்தி வருகிறது என்பதை, அருள்பணி கஸ்ஸாஸ் அவர்கள், தன் உரையில் சுட்டிக்காட்டினார்.

யூதம், கிறிஸ்தவம், இஸ்லாம் என்ற பழம்பெரும் மதங்கள் மூன்றும் புனிதம் என்று கருதும் பல திருத்தலங்களைக் கொண்ட இஸ்ரேல், பாலஸ்தீன நாடுகள், தங்கள் கருத்து வேறுபாடுகளை, அரசியல் முறையில் தீர்க்க தீவிர முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்பதே, திருத்தந்தை, மற்றும் திருப்பீடத்தின் இடைவிடாத விண்ணப்பம் என்று அருள்பணி கஸ்ஸாஸ் அவர்கள் கூறினார்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.