2017-07-25 15:55:00

நீரைச் சேமிப்பதற்கு வத்திக்கானில் புதிய நடவடிக்கை


ஜூலை,25,2017. உரோம் நகரிலும், அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலும், கடும் வறட்சி நிலவும்வேளை, தண்ணீரைச் சேமிப்பதற்கு, திருப்பீடம் புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்துள்ளது.

வத்திக்கான் தூய பேதுரு வளாகத்திலுள்ள நீரூற்றுகள், வத்திக்கான் தோட்டத்திலுள்ள நீரூற்றுகள்  உட்பட, வத்திக்கானிலுள்ள எல்லா நீரூற்றுகளையும் நிறுத்துவதற்கு,  வத்திக்கான் நாட்டு நிர்வாகம் தீர்மானித்துள்ளது.

நம் பூமியாகிய, பொதுவான இல்லத்தைப் பாதுகாப்போம் என, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் வெளியிட்ட, Laudato Si' அதாவது இறைவா! உமக்கே புகழ் என்ற திருமடலின் போதனைகளுக்கு ஒத்திணங்கிச் செல்வதன் அடையாளமாக, வத்திக்கான் நாட்டு நிர்வாகம், இத்தீர்மானித்தை எடுத்துள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இதற்கிடையே, இத்தாலியில், வெப்பநிலை அதிகரித்துள்ளது மற்றும், நீர்வள ஆதாரங்களுக்கு அவசியமான மழைப் பொழிவு குறைவால், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் என்ற அச்சம் நிலவுகிறது.

இத்தாலியில், கடந்த அறுபது ஆண்டுகளில், இவ்வாண்டின் வசந்தகாலம் கடும் வறட்சியாக இருந்ததென்றும், நாட்டின் சில பகுதிகளில் மழைப்பொழிவு, வழக்கமானதைவிட எண்பது விழுக்காடு குறைவு என்றும், இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில், உரோம் நகரில் 26 நாள்களே மழை பெய்தது என்றும், வானிலை ஆய்வாளர்கள் கூறியுள்ளனர். 

இத்தாலியில், ஏற்கனவே 200 கோடி யூரோ மதிப்புடைய வேளாண்மை பாதிக்கப்பட்டுள்ளவேளை, பரவிவரும் காட்டுத்தீயை அணைப்பதற்கும், நிறையக் காலன்கள் தண்ணீர் தேவைப்படுகின்றது எனக் கூறப்பட்டுள்ளது.

உரோம் நகரின் சாலைகளில் அமைக்கப்பட்டுள்ள, குடிதண்ணீர் குழாய்களில் எப்போதும் தண்ணீர் ஊற்றிக்கொண்டே இருக்கும். இந்தக் குழாய்களுக்கு அடைப்பான்கள் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.