2017-07-25 15:54:00

இந்திய, பாகிஸ்தான் எல்லையில் அமைதி குறித்த கல்வி


ஜூலை,25,2017. தொடர் மோதல்களின் இடமாக அமைந்துள்ள, இந்திய - பாகிஸ்தான் எல்லையில், அமைதியின் அவசியத்தை வலியுறுத்தும் நோக்கத்தில், இளையோருக்கு அமைதி குறித்த கல்வியை வழங்கும் திட்டத்தை ஆரம்பித்துள்ளது, ஜம்மு-காஷ்மீர் மறைமாவட்டம்.

இந்திய - பாகிஸ்தான் எல்லையின் இந்தியப் பகுதியில், மாணவர்க்குத் தொடங்கப்பட்டுள்ள இக்கல்வித் திட்டம் பற்றி, UCA செய்தியிடம் விளக்கிய, ஜம்மு-காஷ்மீர் மறைமாவட்ட சமூகநலப்பணி மையத்தின் இயக்குனர், அருள்பணி சாஜூ சாக்கோ அவர்கள், நாம் எல்லாரும் ஒரே மனிதக் குடும்பத்தைச் சார்ந்தவர்கள் என்ற உணர்வை மாணவர் மத்தியில் உருவாக்க முயற்சிப்பதாகத் தெரிவித்தார்.

"Maitri Abhiyan" அதாவது அமைதி இயக்கம் என்ற தலைப்பில் நடத்தப்படும் இத்திட்டம், இந்திய கத்தோலிக்க காரித்தாஸ் நிறுவனத்தின் உதவியுடன் நடைபெறுவதாகவும், அருள்பணி சாக்கோ அவர்கள் கூறினார்.

இக்கல்வித் திட்டத்தில் கலந்துகொள்ளும் மாணவி அனிதா ஷர்மா கூறுகையில், வெறுப்பினால், அழிவு ஒன்றே ஏற்படுகின்றது என்றும், இப்பகுதியின் நிலவரம் பற்றித் தெளிவாக அறிய முடிகின்றது என்றும், சமூகம், முன்னேற விரும்பினால் அமைதி இன்றியமையாதது என்பதைக் கற்றுக் கொண்டேன் என்றும் பகிர்ந்துகொண்டுள்ளார்.

காஷ்மீர் பிரச்சனையை முன்னிட்டு, இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே,   குறைந்தது மூன்று பெரிய போர்கள் இடம்பெற்றுள்ளன.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.