2017-07-25 15:41:00

ஆசியாவில் மனித வர்த்தகம் பற்றிய முதல் பல்சமயக் கருத்தரங்கு


ஜூலை,25,2017. மனித வர்த்தகத்திற்கெதிரான உலக நாளையொட்டி, அமைதிக்கான ஆசிய மதங்கள் அவை (ARCP), மனிலா புனித தாமஸ் பல்கலைக்கழகத்தில், பன்னாட்டு கருத்தரங்கு ஒன்றை நடத்தியுள்ளது.

‘நவீனகால அடிமைத்தனத்திற்கெதிராக, பெண்களின் மேம்பாடு’ என்ற தலைப்பில், கடந்த வாரத்தில் (ஜூலை 20-22), ஆசியாவின் பல சமயத்தவர் முதல்முறையாக இணைந்து நடத்திய இக்கருத்தரங்கில், நலிவுற்ற பெண்களும், சிறாரும், மனித வர்த்தகத்தில் ஈடுபடுத்தப்படுவதை நிறுத்துவதற்கு, குடும்ப விழுமியங்கள் ஊக்குவிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மனிதத்தை கீழ்மைப்படுத்தும் நவீனகால அடிமைத்தனத்தின் கொடிய விளைவுகள் குறித்து, இக்கருத்தரங்கில் கலந்துகொண்ட, பல்வேறு மதங்கள், மனித உரிமை குழுக்கள், மற்றும், சமய நிறுவனங்களின் பிரதிநிதிகள் பகிர்ந்துகொண்டனர்.

2016ம் ஆண்டின், உலகளாவிய அடிமைத்தன குறியீட்டின்படி, உலகில், ஏறத்தாழ 4 கோடியே 50 இலட்சம் பேர், மனித வர்த்தகத்திற்குப் பலியாகின்றனர், இவர்களில் ஏறத்தாழ மூன்றில் இரண்டு பகுதியினர் ஆசியர்கள் எனத் தெரிகின்றது.

மனித வர்த்தகத்திற்கெதிரான உலக நாள், ஒவ்வோர் ஆண்டும் ஜூலை 30ம் தேதி கடைப்பிடிக்கப்படுகின்றது.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.