2017-07-24 15:42:00

தீமைகளை அடையாளம் கண்டு தீர்ப்பிடுவது, இறைவனின் பணி


ஜூலை,24,2017. நன்மைத்தனமும் தீயவைகளும் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் பின்னிப் பிணைந்தே உள்ளன, அவற்றைப் பிரித்தறிவதோ அல்லது, அவற்றைத் தீர்ப்பிடுவதோ, நம்மால் இயலக்கூடியது அல்ல என இஞ்ஞாயிறு மூவேளை செப உரையின்போது உரைத்தார் திருத்தந்தை பிரான்சிஸ்.

உரோம் நகர் புனித பேதுரு வளாகத்தில் 20,000த்திற்கும் மேற்பட்டோர் குழுமியிருக்க, அவர்களுக்கு மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நாளின் நற்செய்தி வாசகம் எடுத்துரைத்த, தீய விதைகளை விதைத்துச் சென்ற தீயோனின் செயல் குறித்தும், இறைவனின் பொறுமை குறித்தும் விளக்கும் உவமைப் பற்றிய கருத்துக்களை முன்வைத்தார்.

இன்றைய வாசகம் மூன்று உவமைகள் குறித்து எடுத்தியம்பினாலும், தான், முதல் உவமை குறித்து மட்டுமே இன்று பேச விரும்புவதாகத் தெரிவித்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், 'வயலில் தோன்றிய களைகள்' உவமையில், நல்ல விதைகளும், களைகளும் என்பவை, இவ்வுலகில் காணப்படும் தீயவற்றையும், விதைகளையும், களைகளையும் வளரவிடும் இறைவனின் பொறுமையையும் காட்டுகின்றன என்றார்.

ஒரே நிலத்தில் இரு எதிர் எதிர் உருவங்களைப் பார்க்கின்றோம். ஒருவர் நிலத்தில் நல்ல விதைகளை விதைக்கும் நில உரிமையாளர், அதாவது, இறைவன், மற்றவரோ, களைகளை விதைக்கும் எதிரி, அதாவது, சாத்தான் என உரைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள்,  இங்கு இருவேறு அணுகுமுறைகளைக் கொண்ட வேலையாளையும், நில உரிமையாளரையும் பார்க்கிறோம், ஒருவர் களைகளைப் பிடுங்க முனைகிறார், மற்றவரோ, கோதுமை பயிர் மீது கொண்ட அக்கறையால், ஒன்றிலிருந்து மற்றதை தெளிவாக பகுத்தறியும்வரை, களைகளையும் வளரவிடச் சொல்கிறார், என எடுத்துரைத்து, இறைவனின் பொறுமையை விளக்கினார்.

உலகிலுள்ள அனைத்து தீமைகளையும் அகற்றிவிடுவது என்பது, நம்மால் இயலாத ஒன்று, அது, இறைவனாலேயே இயலக்கூடிய ஒன்று என்ற கருத்தையும் வலியுறுத்தினார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.