2017-07-24 15:58:00

சிரியாவில், இறந்தவர்களுக்கும் நிம்மதியில்லை


ஜூலை,24,2017. சிரியாவில் உயிரிழந்தவர்களும் நிம்மதியாக இருக்கமுடியாத நிலையே உள்ளது என்ற கவலையை வெளியிட்டுள்ளார் அலெப்போ கிரேக்க ஆர்த்தடாக்ஸ் உயர் மறைமாவட்டத்தின் முதன்மை குரு Moses Alkhassi.

இறந்தவர்களின் கல்லறைகளும் உள்நாட்டு மோதல்களில் அழிவுக்குள்ளாகி வருவதாகவும், கல்லறைச் சிலுவைகளும் திருடப்பட்டு வருவதாகவும் உரைத்த அருள்பணி Moses Alkhassi, அவர்கள், தன் தொன்மையான அழகை இழந்து, பணவீக்கத்தின் உச்சிக்கேச் சென்று, நாட்டின் 80 விழுக்காட்டு மக்கள் குடிபெயர்ந்தவர்களாக வாழும் சிரியாவில், தங்களின் இறந்த உறவினர்களுக்கு நல்லடக்கத்தைக் கொடுக்கும் நிலையில்கூட மக்கள் இல்லை என்று கூறினார்.

குண்டு வீச்சுகளால் பாதிக்கப்பட்ட கல்லறைகளை இடம் மாற்றும் பணிக்கென 45 ஆயிரம் யூரோக்களை வழங்க Aid to the Church in Need என்ற, 'துன்புறும் திருஅவைக்கான உதவி' எனற அமைப்பு முன்வந்துள்ளதாகவும் கூறினார் அலெப்போ உயர் மறைமாவட்ட முதன்மை அருள்பணியாளர்.

இஸ்லாமியத் தீவிரவாத குழுவுக்கும் அரசு துருப்புகளுக்கும் இடையே இடம்பெற்ற மோதலில், கிறிஸ்தவக் கல்லறைகள் பெருமளவில் சேதமடைந்ததால், 2013க்கும் 2016க்கும் இடைப்பட்ட காலத்தில் அரசு நிலத்திலேயே தற்காலிகமாக கிறிஸ்தவர்கள் தங்கள் உறவினர்களை அடக்கம் செய்துவந்தனர்.

தற்போது அவ்வுடல்களை கிறிஸ்தவக் கல்லறைகளுக்கு மாற்றுவதற்கு உதவ Aid to the Church in Need அமைப்பு முன்வந்துள்ளது.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.