2017-07-22 16:26:00

வீட்டுவேலை செய்வோருக்கு அரசு-சாரா அமைப்புகள் உதவி


ஜூலை,22,2017. இந்தியாவில், வீட்டுவேலை செய்யும் இலட்சக்கணக்கான தொழிலாளர்களுக்கு உதவும் நோக்கத்தில், பல்வேறு மாநில அரசுகள், அரசு-சாரா நிறுவனங்களின் உதவியை நாடியுள்ளன என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

இந்தியாவில், 40 இலட்சம் முதல், 60 இலட்சம் பேர், வயது முதிர்ந்தவர்களைக் கவனித்தல், குழந்தைப் பராமரிப்பு, தோட்ட வேலை, மற்றும் ஏனைய வேலைகளில் ஈடுபட்டுள்ளவேளை, இவர்களின் தொழில் திறமைகளை மேம்படுத்துவதற்கு அரசு-சாரா நிறுவனங்களின் உதவியைக் கேட்டுள்ளன, மாநில அரசுகள்.  

இதன் வழியாக, இந்தியாவிலும், வெளிநாடுகளிலும், இத்தொழிலாளர்கள், தங்களின் திறமைகளைச் சிறப்பாக வெளிப்படுத்த முடியும் என்றும் செய்திகள் கூறுகின்றன.

டெல்லியை மையமாகக் கொண்டு செயல்படும், அரசு-சாரா நிறுவனம் ஒன்றின் அலுவலகர் Sumit Garg அவர்கள் பேசுகையில், வீட்டுவேலைத் தொழிலாளர் பிரிவு அவை, அடுத்த பத்து ஆண்டுகளில், 25 இலட்சம் பேருக்கு பயிற்சியளிப்பதற்குத் திட்டமிட்டுள்ளது எனக் கூறியுள்ளார்.

2014ம் ஆண்டில், இந்திய பெண்கள் மற்றும், குழந்தை நலத்துறை வெளியிட்ட அறிக்கையின்படி, 2011ம் ஆண்டில், வீட்டுவேலைத் தொழிலாளருக்கெதிரான வன்முறை குறித்து 3,517 புகார்கள் சமர்ப்பிக்கப்பட்டு இருந்தன, இவை, 2012ம் ஆண்டில் 3,564 ஆக அதிகரித்திருந்தன என்று தெரியவந்துள்ளது.  

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.