2017-07-22 15:49:00

திருத்தந்தையின் உற்சாகமூட்டும் சொற்களுக்காக கொலம்பியா


ஜூலை,22,2017. கொலம்பிய நாட்டினர், நற்செய்தி அறிவிப்புப்பணியிலும், ஒப்புரவு முயற்சிகளிலும் ஈடுபடுவதற்கு, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் உற்சாகமூட்டும் வார்த்தைகள் உதவும் என்ற நம்பிக்கையைத் தெரிவித்தார், அந்நாட்டு ஆயர் பேரவைத் தலைவர் பேராயர் Oscar Urbina Ortega.

வருகிற செப்டம்பர் 6ம் தேதி முதல், 11ம் தேதி வரை, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் மேற்கொள்ளவிருக்கும், கொலம்பியத் திருத்தூதுப் பயணம் பற்றிய எதிர்பார்ப்புகளை, வத்திக்கான் வானொலிக்கு அளித்த பேட்டியில் தெரிவித்த பேராயர் Urbina Ortega அவர்கள், கொலம்பிய மக்கள், கடந்தகால வாழ்வுக்கு மீண்டும் செல்லாமல் இருப்பதற்கும், திருத்தந்தையின்  திருத்தூதுப் பயணம் உதவும் என்றும் கூறினார்.

கொலம்பியாவில், பல ஆண்டுகளாக இடம்பெற்ற உள்நாட்டுப் போருக்குப் பின், 2016ம் ஆண்டில் அமைதி ஒப்பந்தம் கையெழுத்தானதையடுத்து, நாடு, புதிதாகப் பிறப்பெடுத்துள்ளது என்றும், இந்தப் புதிய பிறப்பில், நற்செய்தியின் ஒளியில் மக்கள் செல்வதற்கு, திருத்தந்தையின் வார்த்தைகள் உதவும் என்றும் கூறினார், பேராயர் Urbina Ortega.

தென் அமெரிக்க நாடான கொலம்பியாவில், ஏறத்தாழ ஐம்பது ஆண்டுகளாக நடைபெற்ற உள்நாட்டுப் போருக்குப் பின், நாட்டை மீண்டும் கட்டியெழுப்பவும், ஒப்புரவைக் கொணரவுமான முயற்சிகள் கடினமாக இருப்பதாகக் கூறப்படுகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.