2017-07-20 15:33:00

கால்களை இழந்த தொழிலாளியுடன் தொலைப்பேசியில் திருத்தந்தை


ஜூலை,20,2017. அர்ஜென்டீனா நாட்டின் புவெனஸ் அயிரஸ் நகரில் வாழும் Maximiliano Acuña என்ற தொழிலாளி, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களிடமிருந்து வந்த தொலைப்பேசி அழைப்பால் ஆனந்த அதிர்ச்சியடைந்தார் என்று CNA கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

துப்புரவு தொழில் செய்யும் 33 வயது நிரம்பிய Maximiliano அவர்கள், மார்ச் 22ம் தேதி, குப்பைகளை அகற்றும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, வேகமாக வந்த ஒரு கார் அவர் மீது மோதியதால், அவர் தன் இரு கால்களையும் இழக்க வேண்டியதாயிற்று.

புவெனஸ் அயிரஸ் நகர அதிகாரிகளில் ஒருவரான, Gustavo Vera அவர்கள், இந்த விபத்தைக் குறித்து திருத்தந்தைக்கு மின்னஞ்சல் ஒன்றை அனுப்பியதைத் தொடர்ந்து, திருத்தந்தை, Maximiliano அவர்களை, ஜூலை 18, இச்செவ்வாயன்று தொலைப்பேசியில் அழைத்துப் பேசினார்.

ஐந்து குழந்தைகளுக்குத் தந்தையான Maximiliano அவர்கள், இந்த விபத்திற்குப்பின் 'கோமா' நிலையில் இருந்தார் என்றும், மூன்றாம் நாள் அவரே மீண்டும் சுயநினைவு அடைந்தார் என்றும் CNA செய்தி கூறுகிறது.

திருத்தந்தையின் தொலைப்பேசி அழைப்பைக் குறித்து, அர்ஜென்டீனா தொலைக்காட்சி நிகழ்வு ஒன்றில் பேட்டியளித்த Maximiliano அவர்கள், தான் காட்டிய நம்பிக்கையும், மன உறுதியும், ஏனையோருக்கு எடுத்துக்காட்டாக இருக்கவேண்டும் என்று, திருத்தந்தை தன்னிடம் கூறியதாக தெரிவித்தார்.

திருத்தந்தை தன்னை அழைத்தது, தனக்கு ஆறுதலும், நம்பிக்கையும் தந்தது என்றும், தன் இரு கால்களையும் இழந்தபோதிலும், வேறு பல வழிகளில் இறைவன் தன் அன்பை தனக்கு வெளிப்படுத்தி வருகிறார் என்றும், Maximiliano அவர்கள் இப்பேட்டியில் குறிப்பிட்டார்.

ஆதாரம் : CNA/EWTN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.