2017-07-19 16:55:00

பங்களாதேஷ் கிறிஸ்தவர்கள் அரசியலில் ஈடுபட அழைப்பு


ஜூலை,19,2017. கிறிஸ்தவர்கள், அரசியல் உலகில் இன்னும் ஆக்கப்பூர்வமாக ஈடுபட்டு, சமுதாயத்திற்காக உழைப்பதற்கு, இன்றையச் சூழல் நம்மைத் தூண்டுகிறது என்று, பங்களாதேஷ் கர்தினால், பாட்ரிக் டி'ரொசாரியோ அவர்கள் உரையாற்றினார் என்று UCA செய்தியொன்று கூறுகிறது.

பங்களாதேஷ் கிறிஸ்தவக் கழகம் என்ற அமைப்பு, ஜூலை 17, இத்திங்களன்று தன் 50ம் ஆண்டு நிறைவைக் கொண்டாடிய வேளையில், இவ்விழாவுக்குத் தலைமை வகித்து, உரை வழங்கிய கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள், கிறிஸ்தவ விழுமியங்களின் அடிப்படையில், கிறிஸ்தவர்கள், அரசியல் தளத்தில் பணியாற்றவேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.

பிரிவுகளை உருவாக்கி, மோதல்களை வளர்த்துவரும் இன்றைய அரசியல் முறைகளுக்கு ஒரு மாற்றாக, பங்களாதேஷ் கிறிஸ்தவக் கழகம் போன்ற அமைப்புக்கள் செயலாற்றவேண்டும் என்று கர்தினால் டி'ரொசாரியோ அவர்கள் வலியுறுத்திக் கூறினார்.

1967ம் ஆண்டு, கிழக்கு பாகிஸ்தான் கிறிஸ்தவக் கழகம் என்ற பெயரில் துவங்கிய ஓர் அமைப்பு, 1971ம் ஆண்டு, பங்களாதேஷ், சுதந்திரம் அடைந்தபின், பங்களாதேஷ் கிறிஸ்தவக் கழகம் என்ற பெயரில் இயங்கி வருகிறது என்றும், இன்று, இவ்வமைப்பில், 10,000த்திற்கும் அதிகமானோர் உறுப்பினர்களாக உள்ளனர் என்றும் UCA செய்திக்குறிப்பொன்று கூறுகிறது.

ஆதாரம் : UCAN / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.