2017-07-19 17:17:00

சிலே நாட்டின் பாதுகாவலர், கார்மேல் அன்னை திருநாள்


ஜூலை,19,2017. சிலே நாட்டில் அனைவரும் உடன்பிறந்தோர், மரியாவின் இல்லமான இந்நாட்டில், யாரும் அன்னியர் அல்ல என்று, சந்தியாகோ உயர் மறைமாவட்டப் பேராயர், கர்தினால் ரிகார்தோ எஸ்ஸாத்தி (Ricardo Ezzati) அவர்கள் மறையுரை வழங்கினார்.

சிலே நாட்டின் பாதுகாவலர் என்று சிறப்பிக்கப்படும் கார்மேல் அன்னை திருநாளையொட்டி, இஞ்ஞாயிறன்று சிறப்புத் திருப்பலி நிறைவேற்றிய கர்தினால் எஸ்ஸாத்தி அவர்கள், சிலே நாட்டில் குடியேறும் அன்னியர், இந்நாட்டிலேயே கைவிடப்படும் சிறுவர், சிறுமியர், இளையோர் ஆகியோரை தன் மறையுரையின் மையப்பொருளாக்கினார் என்று பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

மைப்பூ (Maipù) எனுமிடத்தில் அமைந்துள்ள கார்மேல் அன்னை தேசியத் திருத்தலத்தில் கூடியிருந்த 60,000த்திற்கும் அதிகமான பக்தர்களுக்குத் திருப்பலியாற்றிய கர்தினால் எஸ்ஸாத்தி அவர்கள், விருந்தோம்பலுக்கு ஓர் எடுத்துக்காட்டாக விளங்கிய அன்னை மரியா நமக்கு வழிகாட்டவேண்டும் என்று அழைப்பு விடுத்தார்.

அன்பு ஒன்றே ஒரு சமுதாயத்தை உண்மையான முன்னேற்றத்திற்கு அழைத்துச் செல்லும் என்பதை தன் மறையுரையில் வலியுறுத்திக் கூறிய கர்தினால் எஸ்ஸாத்தி அவர்கள், வெறுப்பை வெளிப்படுத்தும் வார்த்தைகளை விடுத்து, அன்பு இலக்கணத்தை அடுத்தத் தலைமுறைக்குச் சொல்லித் தருவது நம் அனைவரின் கடமை என்று எடுத்துரைத்தார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.