2017-07-17 16:17:00

திருத்தந்தை: இதய நிலங்களில் இறைவார்த்தையை ஏற்போம்


ஜூலை,17,2017. இறைவனின் வார்த்தை எனும் விதைகளை ஏற்றுக்கொள்ள நம் இதயங்கள் தயாராக இருக்கின்றனவா என நம்மையே நாம் சோதிக்கும் அதேவேளை, விதைகளை ஏற்கும் நிலங்களாக நம் இதயங்களை சுத்தப்படுத்தி, தயாரிப்போம் என அழைப்பு விடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

30,000திற்கும் மேற்பட்ட விசுவாசிகள் தூய பேதுரு பேராலய வளாகத்தில் குழுமியிருக்க, அவர்களுக்கு ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், நிலத்திலிருந்து முட்புதர்களையும் பாறைகளையும் அகற்றுவதைப்போல், நம் உள்ளங்களில் நிறைந்திருக்கும் உலக செல்வங்கள் குறித்த ஆசைகளை நீக்கி தூய்மைப்படுத்த வேண்டும் என்று கூறினார்.

இஞ்ஞாயிறு திருப்பலி வாசகம் வழங்கிய‌ விதைப்பவர் உவமை பற்றி தன் ஞாயிறு மூவேளை செப உரையில் எடுத்துரைத்தத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் மொழியும், இறையியலும், மிகவும் எளிதானவையாக, மக்களின் இதயங்களை நேரடியாக சென்று தொடுவனவாக இருந்தன என்றார்.

கடவுள் நம்மீது எதையும் திணிப்பதில்லை, மாறாக, தன் பரிந்துரையையே முன்வைக்கிறார், மேலும், அவர் நம்மைக் கட்டாயப்படுத்தி தன் பக்கம் இழுப்பதில்லை, மாறாக, தன்னையே நமக்கு கையளிக்கிறார் என்று கூறியத் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தையை பரப்பும் அவரின் அணுகுமுறை, தராள மனப்பான்மையையும், பொறுமையையும், உள்ளடக்கியது என்றார்.

இயேசுவின் இந்த உவமை, விதைப்பவன் உவமை என அழைக்கப்பட்டாலும், இது விதைப்பவரைப் பற்றிப் பேசவில்லை, மாறாக நிலத்தைப் பற்றி, அதாவது, விதைகளைப் பெறும் நம்மைப் பற்றிப் பேசுகிறது என மேலும் கூறினார், திருத்தந்தை பிரான்சிஸ்.

இறைவனின் வார்த்தைகள் வேரூன்ற வேண்டுமானால், உலகச் சுகங்கள் குறித்த ஆசைகளிலிருந்து நாம் வெளிவரவேண்டும் என்ற அழைப்பையும் முன்வைத்த திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இறைவார்த்தை எனும் விதைகளை ஏற்றுக்கொண்டு பலன்தர, நம் இதயங்களை சுத்தப்படுத்தி, திறந்து வைப்போம் என மேலும் உரைத்தார்.

ஆதாரம்: வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.