2017-07-15 15:28:00

வன்முறையைத் தடுப்பதில் சமயத் தலைவர்களின் பங்கு


ஜூலை,15,2017. காட்டுமிராண்டித்தனமான நடவடிக்கைகளிலிருந்து அப்பாவி பொதுமக்களைக் காப்பாற்றுவதில், சமயத் தலைவர்களுக்கு உள்ள முக்கிய பங்கை வரவேற்கும் அதேவேளை, தேசிய அரசுகளும், பன்னாட்டு சமுதாயமும் இதில் தலையாயப் பொறுப்பைக் கொண்டுள்ளன என்று, ஐ.நா.வில் வலியுறுத்திப் பேசியுள்ளார் வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர்.

கொடூரமான குற்றச் செயல்களுக்கு இட்டுச்செல்லும், வன்முறைகளைத் தடுத்து நிறுத்துவதில், சமயத் தலைவர்களுக்கும், நடிகர்களுக்கும் இருக்கின்ற பங்கு குறித்த செயல்திட்ட கூட்டத்தில் உரையாற்றிய, ஐ.நா.வில் திருப்பீடத்தின் சார்பில் பங்கேற்றுவரும் பேராயர் பெர்னார்தித்தோ அவுசா அவர்கள், இவ்வாறு கூறினார்.

நியூ யார்க் நகரின் ஐ.நா. தலைமையகத்தில், ஜூலை 14, இவ்வெள்ளியன்று நடைபெற்ற, கூட்டத்தில், உரையாற்றிய பேராயர் அவுசா அவர்கள், மூன்றாண்டுகள் கடினமாக உழைத்தபின், கொண்டுவரப்பட்டுள்ள இத்திட்டம் குறித்த, தனது மூன்று முக்கிய கருத்துக்களை வெளியிட்டார்.

தங்கள் மத நம்பிக்கையாளர்களிடம் அதிகமான நேர்மறைத் தாக்கங்களைக் கொண்டிருக்கும் சமயத் தலைவர்கள், இந்தச் செல்வாக்கை, தவறாகப் பயன்படுத்தி, வன்முறைகளைத் தூண்டிவிடுவதையும், அவற்றுக்கு நியாயம் சொல்வதையும் சுட்டிக்காட்டினார், பேராயர் அவுசா.

கடவுளின் பெயரால் பிறருக்கு எதிராக வன்முறையைத் தூண்டிவிடுவது, கடவுளின் பெயருக்கு எதிராக இழைக்கப்படும் பெரும் நிந்தனை மற்றும், மதத்திற்கு ஒவ்வாத செயல் என்பதை, பல சமயத் தலைவர்கள் கூறிவருவதையும் சுட்டிக்காட்டினார், பேராயர் அவுசா.

தங்களின் சமூகங்களில் அமைதியை ஊக்குவிப்பதற்கு, பல்சமய உரையாடலில் ஈடுபடுமாறு விசுவாசிகளைத் தூண்டுமாறும், மனித மாண்பு, பிறரன்பு, உடன்பிறப்பு உணர்வு போன்றவற்றின் அடிப்படையில், சமூகங்களை அமைக்குமாறும், சமயத் தலைவர்களுக்கும், குழுக்களுக்கும் அழைப்பு விடுத்தார், பேராயர் அவுசா.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.