2017-07-15 15:08:00

ஏற்புடைமை கோட்பாடு குறித்த சீர்திருத்த சபைகளின் இசைவுக்கு...


ஜூலை,15,2017. யார் மீட்படையக்கூடும் என்பதைக் கூறும் ஏற்புடைமை கோட்பாட்டில், கத்தோலிக்கர், லூத்தரன் மற்றும் மெத்தடிஸ்ட் கிறிஸ்தவ சபைகளிடையே இதுவரை நிலவிவந்த கருத்து ஒருங்கிணைப்பில், உலக சீர்திருத்த சபைகளின் கூட்டமைப்பும் இணைந்துள்ளதை வரவேற்றுள்ளார், திருத்தந்தை பிரான்சிஸ்.

உலக சீர்திருத்த சபைகள் கூட்டமைப்பு இணைந்துள்ள இந்த அர்ப்பணம், கிறிஸ்துவில் சகோதர, சகோதரிகளாக, நாம் ஒன்றிணைந்து தொடர்ந்து செயல்படுவதன் சிறந்த அடையாளமாக உள்ளது என்று கூறியுள்ள திருத்தந்தை, இந்த அர்ப்பணத்தில் எதிர்கொள்ளப்படும் புதிய சவால்கள் மற்றும், பொறுப்புகள் குறித்தும் கோடிட்டுக் காட்டியுள்ளார்.

இந்த அர்ப்பணம், மனித சமுதாயத்திற்கு நாம் ஆற்றும் நீதி மற்றும், அமைதிப் பணியில், கிறிஸ்தவ சபைகளுக்கிடையே நட்புறவு மற்றும், ஒத்துழைப்பின் புதிய தளத்திற்கு அடித்தளமிட்டுள்ளது எனவும், திருத்தந்தை கூறியுள்ளார்.

1517ம் ஆண்டில், மார்ட்டின் லூத்தர், திருஅவையின் பாவ மன்னிப்பு முறைகளுக்கு எதிராக, தன் குரலை எழுப்பிய ஜெர்மனியின் விட்டன்பர்கில், இம்மாதத்தில் நடைபெற்ற கூட்டத்தில், உலக சீர்திருத்த சபைகள் கூட்டமைப்பு, தன் இசைவைத் தெரிவித்தது.

இந்நடவடிக்கை குறித்த திருத்தந்தையின் மகிழ்ச்சி செய்தியை, இக்கூட்டத்தில் கலந்துகொண்ட, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் செயலர் ஆயர் Brian Farrell அவர்கள் வாசித்தளித்தார்.

மேலும், இந்நிகழ்வு குறித்து, ஜூலை 14, இவ்வெள்ளியன்று, லொசர்வாத்தோரே ரொமானோ நாளிதழில் செய்தி வெளியிட்டுள்ள, திருப்பீட கிறிஸ்தவ ஒன்றிப்பு அவையின் உறுப்பினர், அருள்பணி Avelino Gonzalez-Ferrer அவர்கள், 16ம் நூற்றாண்டில், கத்தோலிக்கருக்கும், லூத்தரன் சபையினருக்குமிடையே இடம்பெற்ற விவாதத்தில், ஏற்புடைமை கோட்பாடே முக்கியமானதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

ஜூலை 3ம் தேதி முதல், 5ம் தேதி வரை, விட்டன்பர்கில், இக்கூட்டம் நடைபெற்றது.

ஆதாரம் : Zenit /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.