2017-07-12 16:02:00

போர் இனி ஒருபோதும் வேண்டாம் - பிலிப்பீன்ஸ் ஆயர்கள்


ஜூலை,12,2017. பிலிப்பீன்ஸ் நாட்டின் மராவி நகரில் போர் இனி வேண்டாம், போர் என்பது இனி ஒருபோதும் வேண்டாம் என்ற விண்ணப்பத்தை அந்நாட்டு ஆயர் பேரவை வெளியிட்டுள்ளது.

ஜூலை 8ம் தேதி முதல் 10ம் தேதி முடிய மணிலாவில் நடைபெற்ற பிலிப்பீன்ஸ் ஆயர்களின் 115வது ஆண்டு கூட்டத்தின் இறுதியில், ஆயர் பேரவை இந்த வேண்டுகோளை விடுத்துள்ளதென ஆசிய செய்தி கூறுகிறது.

இஸ்லாமியருக்கு தனிப்பட்ட ஒரு பகுதியை வழங்காமல், இந்தப் பிரச்சனைக்குத் தீர்வு காண்பது மிகவும் கடினம் என்று, Cotabato உயர் மறைமாவட்டத்தின் பேராயர், கர்தினால் Orlando Quevedo அவர்கள் கருத்து தெரிவித்தார்.

மராவி நகரில் நிகழ்ந்துள்ள கொடுமைகளால் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு, மனநல முறையில் அதிக உதவிகள் தேவை என்று மராவி ஆயர் Edwin Angot dela Peña அவர்கள் கூறியுள்ளார்.

மே மாதம் 23ம் தேதி முதல் நடைபெற்றுவரும் மராவி மோதல்கள், கிறிஸ்தவ, இஸ்லாமிய மதங்களுக்கிடையே நிலவும் மோதல்கள் அல்ல என்பதை தெளிவுபடுத்திய பிலிப்பீன்ஸ் ஆயர்கள், இது, அரசியல் மற்றும் அதிகார மோதல்கள் என்று கூறியுள்ளனர்.

ஆதாரம் : AsiaNews / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.