2017-07-12 15:56:00

கொரிய நாடுகளில் அமைதியைக் கொணர எல் சால்வதோர் கர்தினால்


ஜூலை,12,2017. தென் கொரியா, வட கொரியா நாடுகளுக்கிடையே அமைதியை உருவாக்க, தென் கொரியாவின் சோல் நகரில் நடைபெறும் அமைதி பேச்சுவார்த்தைகளில் கலந்துகொள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள் தன்னைப் பணித்துள்ளார் என்று எல்சால்வதோர் நாட்டின் முதல் கர்தினால் கிரகோரியோ ரோசா சாவேஸ் (Gregorio Rosa Chavez) அவர்கள் கூறினார்.

ஜூன் மாத இறுதியில், திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களால் உருவாக்கப்பட்ட ஐந்து கர்தினால்களில் ஒருவரான, சான் சால்வதோர் துணை ஆயர் சாவேஸ் அவர்கள், சான் சால்வதோர் பேராலயத்தில் நிறைவேற்றிய திருப்பலியில் வழங்கிய மறையுரையில் இதனைக் குறிப்பிட்டார்.

சான் சால்வதோர் பேராயராகப் பணியாற்றிய அருளாளர் ஆஸ்கர் ரொமேரோ அவர்களுடன் இணைந்து, எல் சால்வதோர் நாட்டில் அமைதியைக் கொணர 16 ஆண்டுகள் உழைத்த அனுபவமிக்கவர், கர்தினால் சாவேஸ் என்று CNS கத்தோலிக்கச் செய்தி கூறியுள்ளது.

எல் சால்வதோர் நாட்டின் தூதராக வத்திக்கானில் பணியாற்றும் மானுவேல் ரொபெர்த்தோ லோபெஸ் அவர்கள், CNS செய்திக்கு அளித்த பேட்டியில், சால்வதோர் நாட்டில் அமைதி உடன்படிக்கையை உருவாக்க அயராது உழைத்த கர்தினால் சாவேஸ் அவர்களின் அனுபவம், கொரிய தீபகற்பத்தில் அமைதியைக் கொணரும் முயற்சிகளில் பெரிதும் உதவியாக இருக்கும் என்று கூறினார்.

ஆதாரம் : CNS / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.