2017-07-11 16:22:00

புலம்பெயர்தல் பிரச்சனைக்கு மனிதாபிமான அணுகுமுறை தேவை


ஜூலை,11,2017. இன்றைய சமுதாயத்தில் இடம்பெறும் புலம்பெயர்தல் பிரச்சனை குறித்து, உலக அளவிலான, மற்றும், மனிதாபிமானத்துடன் கூடிய அணுகுமுறை ஒன்று தேவை என அறிவித்துள்ளது, குவாத்தமாலா ஆயர் பேரவை.

குவாத்தமாலா நாட்டின் அனைத்து நிறுவனங்களுக்கும் இவ்வழைப்பை முன்வைத்துள்ள அந்நாட்டு ஆயர்கள், புலம்பெயர்வோர் சுரண்டப்படுதல், மனிதாபிமானமற்றமுறையில் நடத்தப்படல் போன்றவைகளை நாம் கவனத்தில் கொள்ளவேண்டும் என விண்ணப்பித்துள்ளனர்.

குவாத்தமாலா நாட்டிலிருந்து மக்கள் வெளியேறுதல், பணக்கார நாடுகளுக்கு குடிபெயர விரும்புவோர் குவாத்தமாலாவுக்குள் புகுந்து இன்னொரு நாட்டிற்குச் செல்லல், புலம்பெயர்ந்தோர் குவாத்தமாலாவிற்கே திருப்பி அனுப்பப்படல் போன்றவைகளைக் கண்டுவரும் இந்நாடு, அதற்குரிய அணுகுமுறைச் சட்டங்களைக் கொண்டிருக்கவில்லை எனவும், குறைகூறியுள்ளனர் ஆயர்கள்.

தேசிய மற்றும் அனைத்துலக அளவிலான பொருளாதார சுயநலன்களுக்காக எடுக்கப்படும் தீர்மானங்களால், வன்முறைகளும், ஏழ்மையும், பாகுபாட்டு நிலைகளும், நாடுகடத்தல்களும் அதிகரித்துள்ளன என்பதையும் சுட்டிக்காட்டி, கவலையை வெளியிட்டுள்ளனர், க்வாத்தமாலா ஆயர்கள். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.