2017-07-11 16:00:00

புனிதர் பட்ட படிமுறைகள் குறித்த புதிய விதிமுறைகள்


ஜூலை,11,2017. 'வாழ்வைக் கையளித்தல்' என்பது குறித்து, சுய விருப்பத்தின் பேரில் எனப் பொருள்படும் Motu Proprio எனும் திருத்தூது மடலை, இச்செவ்வாய்க்கிழமையன்று வெளியிட்டார் திருத்தந்தை பிரான்சிஸ்.

'தன் நண்பர்களுக்காக உயிரைக் கொடுப்பதைவிட மேலான அன்பு வேறில்லை' என்ற இயேசுவின் வார்த்தைகளுடன் தன் திருத்தூது மடலை எழுதியுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசுவின் பாதையில் நடைபோடும் கிறிஸ்தவர்கள், மற்றவர்களுக்காக தங்கள் வாழ்வை மனமுவந்து கையளித்துள்ளதைக் சுட்டிக்காட்டியுள்ளார்.

மறைசாட்சிய மரணம் குறித்தும், புண்ணியப் பண்புகள் குறித்தும் தன் மடலில் குறிப்பிட்டுள்ள திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ஒருவர் அருளாளராக அறிவிக்கப்படுவதற்கு முன்னர் பின்பற்றவேண்டிய விதிமுறைகள் குறித்தும் சுட்டிக்காட்டியுள்ளார்.

சுதந்திரமாக வாழ்வைக் கையளித்தல், வாழ்வைக் கையளிப்பதற்கு முன்னர் கிறிஸ்தவ மதிப்பீடுகளில் வாழ்ந்திருத்தல், உயிரைக் கையளித்தவரின் மரணத்திற்குப் பின்னான புனித மற்றும் வீரத்துவ அடையாளங்கள், புதுமை போன்றவை குறித்தும் தன் மடலில் எடுத்துரைக்கும் திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், மறைமாவட்ட அளவிலிருந்து துவக்கப்படவேண்டிய விசாரணைகள் குறித்தும் சில விதிமுறைகளை முன்வைத்துள்ளார்.

புண்ணியப் பண்புகள் மற்றும் புதுமைகள் குறித்த விசாரணைகள் தனித்தனியாக இடம்பெறவேண்டும், அவைகளை நேரில் பார்த்த சாட்சியங்கள், அல்லது, அவர்கள் காலத்து எழுத்து சாட்சியங்கள் வழியாக ஆராயப்படவேண்டும் எனவும்  தன் மடலில் கூறியுள்ளார் திருத்தந்தை.

ஓர் இறையடியாருக்கு புனிதர் பட்டம் வழங்குவதற்கென மறைமாவட்ட அளவில் துவக்கப்படும் விசாரணைகளின்போதே, தலத்திருஅவையில் அந்த இறையடியார் தொடர்புடைய வழிபாடுகளைத் துவக்குவது, முற்றிலுமாக தடைச் செய்யப்படுகின்றது எனபதையும், தெளிவாக தன் மடலில் வலியுறுத்தியுள்ளார் திருத்தந்தை பிரான்சிஸ்.

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.