2017-07-10 15:37:00

வாரம் ஓர் அலசல் – திறமைகளைக் கண்டுணர்ந்து..


ஜூலை,10,2017. இந்தியாவின் மத்திய பிரதேச மாநிலம், சேஹோர் (Sehore) மாவட்டம், பசந்த்புர் பங்கிரி (Basantpur Pangri) கிராமத்தை சேர்ந்தவர் சர்தார் கஹ்லா (Sardar Kahla). விவசாயியான அவருக்கு 14 வயதில் ராதிகா என்ற மகளும், 11 வயதில் குந்தி என்ற மகளும் உள்ளனர். விவசாயப் பணிகளைத் துவங்க வேண்டிய நிலையில், தனது நிலத்தை உழும் பணிக்கு சர்தார் அவர்களிடம், சொந்தமாக காளைகள் இல்லை. வாடகைக்கு எடுக்கக்கூட பணம் இல்லை. இதனால், அவர் தனது இரண்டு மகள்களையும், ஏரில் கட்டி நிலத்தை உழுதுள்ளார். இது தொடர்பாக அவர், செய்தியாளர்களிடம் கூறுகையில், நிலத்தை உழுவதற்கு மாடுகளைக் கொண்டு வருவதற்குக்கூட என்னிடம் பணம் இல்லை. இதனால் எனது இரண்டு மகள்களும் படிப்பைப் பாதியில் விட்டுவிட்டனர் எனத் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக மாவட்ட பி.ஆர்.ஓ. ஆஷிஸ் சர்மா (DPRO Ashish Sharma) அவர்கள் கூறுகையில், இந்த விவகாரம் தொடர்பாக அரசு ஆய்வு செய்கிறது. இந்த விவசாயிக்கு, அரசின் திட்டங்களின் கீழ், எந்த வகையில் உதவ முடியுமோ அதனைச் செய்வோம் எனவும், இதுபோன்ற பணிக்கு குழந்தைகளைப் பயன்படுத்த வேண்டாம் என அறிவுறுத்தியுள்ளோம் எனவும் தெரிவித்துள்ளார்.

தன் மகள்களையே ஏரில் பூட்டி நிலத்தை உழுத விவசாயியின் மனநிலை எப்படி இருந்திருக்கும் என, நம்மால் ஓரளவு யூகிக்க முடிகின்றது. உலக அளவில், ஏழை பணக்காரர் இடைவெளி, தொடர்ந்து அதிகரித்து வருகிறது. பயங்கரவாதம், குடிபெயர்வோர், காலநிலை மாற்றம் போன்ற பிரச்சனைகளும், நாடுகளை அச்சுறுத்தி வருகின்றன. ஜெர்மனியின் ஹாம்பர்க் நகரில், கடந்த சனிக்கிழமையன்று நடந்து முடிந்துள்ள ஜி20 நாடுகளின் உச்சி மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட எல்லாத் தீர்மானங்களுக்கும், அதில் கலந்துகொண்ட இருபது நாடுகளில் 19 நாடுகள், இசைவு தெரிவித்துள்ளன என்றும், அமெரிக்க ஐக்கிய நாட்டு அரசுத்தலைவர் டொனால்ட் ட்ரம்ப் அவர்கள், காலநிலை மாற்றம் குறித்த தீர்மானத்தை ஆதரிக்கவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.

இன்றைய உலகின் ஒரு விழுக்காட்டுச் செல்வந்தர்கள், இப்பூமியின் ஐம்பது விழுக்காட்டுச் செல்வத்தைக் கொண்டிருக்கின்றனர். இந்தச் சமத்துவமற்ற நிலைக்குத் தீர்வு காண்பது, இன்றைய உலகிற்குப் பெரும் சவாலாக அடிக்கடி நோக்கப்படுகிறது. மக்களின் வருவாயில் நிலவும் சமத்துவமற்றநிலை முக்கிய பிரச்சனை அல்ல, மாறாக, உலகின் அநீதியான செயல்பாடுகளே இதற்குக் காரணம் என, பிபிசியில், இஞ்ஞாயிறன்று வெளியான ஒரு கட்டுரையில் சுட்டிக்காட்டப்பட்டு இருந்தது. உலகில் சிலர் அதிகச் சலுகையுடனும், ஏனையோர் அநீதியாகவும் நடத்தப்படுகின்றனர். வறுமையும், அநீதியுமே, இந்த 21ம் நூற்றாண்டின் சவால்கள். எல்லாரும் சமமாக நடத்தப்பட்டால், ஏழை பணக்காரர் இடைவெளியை அகற்றலாம், எடுத்துக்காட்டுக்குச் சொல்ல வேண்டுமானால், நவீன மருந்துகள் எல்லாருக்கும் கிடைப்பதில்லை என ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஆனால் எல்லாரும் சமமாக வாழ்வதற்கும் பலர் விரும்புவதில்லையாம். கடினமாக உழைப்பவர்களும், சோம்பேறிகளும், அவரவர் உழைப்புக்கேற்ப வெகுமதி பெற மாட்டார்கள் என்பதே, இதற்கு காரணம் என, அமெரிக்க ஐக்கிய நாட்டின் யேல் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் சொல்லியுள்ளனர்.

வாழ்வில் சாதிப்பவர்களை நோக்கும்போது, ஒன்றை மட்டும் உறுதியாகச் சொல்ல முடிகின்றது. இவர்களின் முன்னேற்றத்திற்கு வறுமை ஒருபோதும் தடையாக இருந்ததில்லை. இந்திய முன்னாள் குடியரசுத் தலைவர் APJ அப்துல் கலாம் அவர்களைவிட சிறந்த எடுத்துக்காட்டைச் சொல்ல முடியாது. அப்துல் கலாம் அவர்கள் சொன்னார் - உங்களை யாரும் புறக்கணித்தால், அதைப் பற்றி கவலைப்படாதீர்கள். ஏனெனில், அவர்களுக்கு உங்களின் மதிப்பும், சிறப்பும் தெரியவில்லை என்று. இராஜஸ்தான் மாநிலத்தில், ரூபா யாதவ் என்ற இருபது வயது நிரம்பிய பெண், மூன்றாம் வகுப்பு படிக்கையில், அதாவது அவருக்கு எட்டு வயதானபோது திருமணம் செய்துகொண்டவர். ஆனால், அண்மையில் நடந்து முடிந்த நீட் தேர்வில் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளார். ஜெய்ப்பூரிலிருந்து ஏறத்தாழ 250 கி.மீ., தொலைவில் உள்ள கிராமத்தில் வாழ்ந்துவரும் ரூபா அவர்கள், தொடர்ந்து படிப்பதற்கு, அவரது கணவரும், குடும்பத்தினரும் உதவியுள்ளனர். இதன் காரணமாக, 10ம் வகுப்பு மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வுகளில் 84 விழுக்காடு மதிப்பெண் எடுத்துள்ளார். இதனையடுத்து இவர், நீட் தேர்வை எழுதி, அதில் வெற்றியும் பெற்றுள்ளார். இதனால் இவர் மருத்துவ கல்லூரியில் படித்து பெரிய மருத்துவராக வருவார் என்ற எதிர்பார்ப்பு, அக்கிராமத்தினருக்கு உள்ளது எனச் செய்திகள் கூறுகின்றன.

சிறுவயதில் பள்ளி படிப்பை நிறுத்திய தென் கொரிய நாட்டவர் ஒருவர் இன்று கோடீஸ்வரர். Bang Joon-hyuk என்ற இந்தக் கோடீஸ்வரரின் தற்போதைய மொத்த சொத்து மதிப்பு 142 கோடி டாலர். தென் கொரியாவில் இவர் தொடங்கிய நெட்மார்பிள் (Netmarble) கைபேசி  விளையாட்டு நிறுவனம், 2015ம் ஆண்டின் நிலவரப்படி, 120க்கும் மேற்பட்ட நாடுகளில் பரவியுள்ளது. மூவாயிரத்திற்கும் மேற்பட்ட பணியாளர்கள் இதில் உள்ளனர். ஆனால் Bang அவர்கள், தென் கொரியாவில், டெக்ஸ்டைல் நிறுவனங்களின் அருகேயுள்ள பின்தங்கிய பகுதியில் பிறந்தவர். பல்வேறு காரணங்களால், இவரால் உயர்நிலைப் பள்ளிப் படிப்பைக்கூட தொடர முடியவில்லை. ஆனால் கணனி விளையாட்டுத் துறையில் இவருக்கு மிகப் பெரிய ஆர்வம் இருந்தது. அந்த ஆர்வம் காரணமாக, இவர் இரண்டாயிரமாவது ஆண்டில் நெட்மார்பிள் நிறுவனத்தைத் தொடங்கினார். ஆரம்பத்தில் வெறும் எட்டு ஊழியர்கள் மட்டுமே இந்த நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தனர். 2011ம் ஆண்டில் மேலும் இரு நிறுவனங்களைக் கையகப்படுத்தி பெரிதுபடுத்தினார். நெட்மார்பிள் நிறுவனம், சண்டை தொடர்பான கைபேசி விளையாட்டுகளை, புதிய வடிவத்தில் தொடர்ந்து அறிமுகப்படுத்தி வருகிறது.

தென் கொரியாவில் Samsung, Hyundai போன்ற நிறுவனங்கள் உற்பத்தி சார்ந்த துறைகளில் புதிய புதிய கண்டுபிடிப்புகளை அறிமுகப்படுத்தி வரும் நேரத்தில் Bang அவர்கள், ஸ்மார்ட்போன் மற்றும் கணனி சந்தையைக் குறிவைத்து களமிறங்கி வெற்றி கண்டுள்ளார் என்கின்றனர் வல்லுநர்கள். 2015ம் ஆண்டில் இந்த நிறுவனத்தின் வருமானம் 94.9 கோடி டாலர்கள். அதாவது முந்தைய 2014ம் ஆண்டைவிட 300 விழுக்காடு வளர்ச்சி கண்டிருந்தது. தற்போது அந்நிறுவனம், அதைவிட அதிக வளர்ச்சி கண்டு வருகிறது. எடுத்துக்காட்டாக, 2015ம் ஆண்டு முதன்முறையாக FORBES ASIA வெளியிட்ட கோடீஸ்வரர்கள் பட்டியலில் Bang அவர்கள் இடம்பிடித்தார். இவரின் அப்போதைய சொத்து மதிப்பு 100 கோடி டாலராக இருந்தது. பின்தங்கிய பகுதியில் இருந்து வந்ததால், Bang Jun-Hyuk அவர்களுக்கு ஆங்கிலம் அவ்வளவாகப் பேசத்தெரியாது என்கின்றனர். ஆனால் தொடர் முயற்சியால் தொழில்நுட்ப ரீதியாக தன்னைப் பலப்படுத்திக் கொண்டு கணனி விளையாட்டு துறையில் முக்கிய இடத்தை பிடித்துள்ளார். இவரது நிறுவனம் தற்போது கணனி மற்றும் கைபேசி விளையாட்டுகள் துறையில் பன்னாட்டு அளவில் ஒன்பதாவது இடத்தில் உள்ளது எனக் கூறப்படுகிறது.

ஒருநாள், ஒருவர், ஒரு வங்கியில் பணம் எடுத்துக்கொண்டு, பணப்பெட்டியைப் பின்னால் மாட்டிக்கொண்டு இரண்டு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றார். வண்டியின் அதிர்வில் அந்தப் பெட்டி லேசாகத் திறந்துகொண்டு, நூறு பத்துரூபாய் தாள்கள் கொண்ட ஒரு கட்டு கீழே விழுந்துவிட்டது. அது தெரியாமல் அந்த நபர் வண்டியை ஓட்டிக்கொண்டு சென்றுவிட்டார். கீழே விழுந்த வேகத்தில், நூறு பத்துரூபாய் தாள்கள் கொண்ட அந்தக் கட்டிலிருந்து ஒரே ஒரு பத்துரூபாய் தாள் மட்டும் விடுபட்டு காற்றில் பறந்து சிறிது தூரத்தில் கிடந்தது. அந்த ஒற்றை பத்துரூபாய் தாள் இருந்த வழியில் ஒருவர் வந்தார். இந்தத் தாளைக் கண்டு, 'இன்று நரி முகத்தில் விழித்திருக்கிறேன் போல' என நினைத்து, மிகவும் மகிழ்ந்தார். அந்தத் தாளை எடுத்துக்கொண்டு உணவகத்திற்குப் போனார். அன்றைய விலைவாசியில் இரண்டு இட்லி, ஒரு காப்பி சாப்பிட்டார். அருகிலிருந்த கோவில் உண்டியலில் மீதியிருந்த ஒரு ரூபாயைப் போட்டு, கடவுளுக்கு நன்றி சொல்லி, மகிழ்வாக வீடு திரும்பினார். மீதி 99 பத்துரூபாய் தாள்கள் கொண்ட கட்டு, அது விழுந்த இடத்திலேயே கிடந்தது. அந்த வழியாக வந்த ஒருவர், இந்த ரூபாய்த் தாள் கட்டைப் பார்த்து எடுத்தார். பரபரவென்று எண்ணினார். 99 தாள்கள். மீண்டும், மீண்டும் பலமுறை எண்ணினார். 99 தாள்கள்தான். வங்கியில் 99 தாள்கள் கொண்ட கட்டு கொடுக்கமாட்டார்களே.... அந்த ஒற்றைப் பத்துரூபாய் தாள் இங்கே பக்கத்தில்தான் கிடக்க வேண்டுமென்று தேட ஆரம்பித்தார். இன்னும் அவர் தேடிக்கொண்டிருக்கிறாராம். எனவே இந்த நபர் போல, இல்லாத ஒன்றைத் தேடி அலைந்தால், நம்மிடம் இருப்பதை உணராமல் போய் விடுவோம். அதனால் நம் உடலும் மனமும் சோர்ந்து துயருறுவோம். மாறாக, இருப்பதை நினைத்து மகிழ்ந்து, அதில் வளர்ச்சி காண முயற்சிப்போம். நாம் என்ன பெறுகின்றோமோ, அவற்றால் வாழ்கின்றோம். ஆனால், நாம் என்ன கொடுக்கின்றோமோ அதிலிருந்து வாழ்வை அமைக்கிறோம். வின்ஸ்டன் சர்ச்சில்

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.