2017-07-10 15:29:00

பாசமுள்ள பார்வையில்.. பாசத்தை உணர்த்திய தாய்


அக்கினி நட்சத்திர வெயிலில், வீட்டின் மேல்கூரை ஓடுகளை மாற்றிக் கொண்டிருந்தார் கமலன். மாலைக்குள் வேலையை முடித்துவிடும் நோக்கத்தில், கடும் வெயிலையும் பொருட்படுத்தாமல், வடியும் வியர்வையைத் துடைத்துக் கொண்டே, மும்முரமாய் ஈடுபட்டிருந்தார் கமலன். வீட்டின் உள்ளேயிருந்த கமலனின் அம்மா, மகன் இப்படி கொளுத்தும் வெயிலில், வேலை செய்வதைக் காணப் பொறுக்காமல், அடிக்கடி வெளியே வந்து பார்த்துக்கொண்டே இருந்தார். மகனே, சிறிது நேரம் கீழே இறங்கி வந்து இளைப்பாறு, மோர் குடி. பிறகு வேலை செய், உனக்கு இவ்வளவு வெயில் ஆகாதுடா கண்ணா என்று சொன்னார். அம்மா சொல்வதைக் காதில் வாங்கிக்கொள்ளவே இல்லை கமலன். ஓடு மாற்றுவதிலே மூழ்கி இருந்தார் அவர். கொளுத்தும் வெயிலில் மகன் வேலை செய்வதைப் பொறுத்துக் கொள்ளவே முடியவில்லை தாய்க்கு. வீட்டிற்குள் சென்ற தாய், தனது இரண்டு வயது பேரக் குழந்தையைத் தூக்கிவந்து வெளியே சிமெண்ட் தரையில் நிற்க வைத்தார். சூடு பொறுக்க முடியாமல் குழந்தை அழுதான். இதைப் பார்த்த கமலன், வேக வேகமாக கீழே இறங்கி வந்து, தன் மகனைத் தூக்கிக் கொண்டு வீட்டுக்குள் ஓடினார். பின், நீயெல்லாம் ஒரு மனுஷியா, ஒரு தாயா என, தன் அம்மாவைத் திட்டினார். அம்மா சொன்னார் – உன் மகன் வெயிலில் கஷ்டப்படுவதைப் பொறுக்க முடியாமல் எப்படித் துடிக்கிறாய், நீ என் மகன் ஆயிற்றே, நீ வெயிலில் கஷ்டப்படுவதை என்னால் எப்படித் தாங்கிக் கொள்ள முடியும், இதை உனக்கு உணர்த்தவே, உன் மகனை வெயிலில் நிற்க வைத்தேன் என்று.

ஆம். அம்மாவின் பாசம், கீழ்நோக்கிப் பாயும் நீரைப் போன்றது. அந்தப் பாசம், மகன், மகள், பேரப்பிள்ளைகள் என்று,  கீழ்நோக்கியே பாயும்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி 








All the contents on this site are copyrighted ©.