2017-07-10 15:29:00

அகற்றுவதற்கல்ல, சிலுவைகளை சுமக்கவே இயேசு உதவுகிறார்


ஜூலை,10,2017. கிறிஸ்து நம் தோள்களிலிருந்து சிலுவையை தானே எடுத்துக்கொண்டு, வாழ்வின் சுமைகளிலிருந்து நமக்கு விடுதலை தருபவராக அல்ல, மாறாக, நம் சுமைகளை நம்முடன் இணைந்து சுமப்பவராகச் செயல்படுகிறார் என்றார் திருத்தந்தை பிரான்சிஸ்.

வத்திக்கான் புனித பேதுரு வளாகத்தில் கூடியிருந்த பல்லாயிரக்கணக்கான மக்களுக்கு இஞ்ஞாயிறு நண்பகல் மூவேளை செப உரை வழங்கியத் திருத்தந்தை, நம் வாழ்வின் சுமைகளைக் கண்டு நாம் கவலைப்படாமல், அவரில் நம் அமைதியைக் காணவேண்டும் என்று அழைப்புவிடுத்த்தோடு, மக்களையும், சூழல்களையும், இயேசுவின் மீது நாம் கொள்ளும் நம்பிக்கையில் ஒப்படைக்கவேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.

'பெரும்சுமை சுமந்து சோர்ந்திருப்பவர்களே, எல்லாரும் என்னிடம் வாருங்கள். நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்'  என்ற இயேசுவின் வார்த்தைகளை, இஞ்ஞாயிறு திருப்பலி வாசகத்திலிருந்து எடுத்து, உரை வழங்கிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இது ஒரு குறிப்பிட்ட மக்களுக்கு மட்டும் வழங்கப்பட்ட அழைப்பு அல்ல, மாறாக, வாழ்வில் சோர்வுற்றிருக்கும் அனைவருக்கும் வழங்கப்பட்டுள்ளது என்றார்.

வாழ்வில் ஏற்படும் தோல்விகளாலும், ஏமாற்றங்களாலும் நாம் நம்மையே மூடிக்கொண்டோமானால், நாம் அனைத்தையும் கறுப்பாகவே கண்டு, சோகத்திற்கே நம்மை உள்ளாக்குவோம், ஆனால், அவற்றைவிட்டு வெளியே வரவேண்டும் என தன் கைகளை விரித்து அழைக்கிறார் இயேசு, என உரைத்த திருத்தந்தை, நம்மிலிருந்து நாம் வெளிவருவது மட்டும் போதாது, வெளிவந்தபின் நாம் எதை நோக்கிச் செல்கிறோம் என்பதும் முக்கியம், என்றார்.

இயேசுவை நோக்கி நாமும் நம் கரங்களை விரித்து, நம் மூடியிருக்கும் பக்கங்களை அவருக்குத் திறந்து, அவர் அதில் மாற்றங்களைக் கொணர அனுமதிப்போம் எனவும் அழைப்புவிடுத்தார், திருத்தந்தை பிரான்சிஸ்.

நம்முடைய பிரச்னைகளுக்கு மாயாஜால வழியில் தீர்வு தருவதற்காக அவர் காத்திருக்கவில்லை, மாறாக, நாம் அந்த பிரச்னைகளை எதிர்கொள்வதில் மேலும் உறுதியடையவேண்டும் என அவர் விரும்புகிறார், என மேலும் கூறிய திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இயேசு நம் வாழ்வில் நுழையும்போதுதான், அமைதியும் நுழைகிறது என மேலும் உரைத்தார். 

ஆதாரம் :  வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.