2017-07-07 15:35:00

பாசமுள்ள பார்வையில்...: அருகாமை தரும் ஆனந்தம்


அன்று, ஸ்ரீராமின் அம்மாவுக்கு 75வது பிறந்த நாள். அலுவலகத்திற்கு சீக்கிரமாகவே கிளம்பிவிட்டார் ஸ்ரீராம். ஏனெனில், போகிற வழியில், பூக்கடையில் நிறுத்தி, 250 மைல்களுக்கு அப்பால், முதியோர் இல்லத்தில் இருக்கும் அம்மாவுக்கு மலர்க்கொத்து அனுப்ப வேண்டும். கடைக்குள் சென்று முகவரியைக் கொடுத்து, பணமும் கொடுத்து, மலர்க்கொத்தை அனுப்பச் சொல்லிவிட்டு, வெளியே வந்த ஸ்ரீராமுக்கு, சாலையின் ஓரத்தில் அழுதுகொண்டிருந்த ஒரு சிறுமி தெரிந்தாள். அருகில் சென்று விசாரித்தபோது  அவள் சொன்னாள், ' என் அம்மாவுக்கு ஒரு பூ வாங்கவேண்டும், ஒரு பூவின் விலை 2 ரூபாய் சொல்கிறார்கள். ஆனால், என்னிடம் ஒரு ரூபாய்தான் இருக்கிறது' என்று. அச்சிறுமியை கடையினுள் அழைத்துச்சென்ற ஸ்ரீராம், ஒரு பூவை வாங்கிக் கொடுத்ததுடன், அவளை வீட்டில் கொண்டு விடுவதாகக் கூறினார். அவளும் காரில் ஏறிக்கொண்டு, ஊருக்கு ஒதுக்குப்புறமாக ஒரு பகுதியைச் சொல்லி, அங்கு காரை விடச் சொன்னாள். ஆம். அது ஒரு மயானம். அங்கு சென்று, புதிதாக தோன்றியிருந்த ஒரு கல்லறையில் அந்த பூவை வைத்தாள், அச்சிறுமி. கல்லறை மண் இன்னும் காய்ந்திருக்கவில்லை. நிச்சயமாக இந்த பெண்ணின் அம்மா இறந்து இரண்டு அல்லது மூன்று நாடகள்தான் ஆகியிருக்க வேண்டும். அந்த சிறுமியின் தாய்ப் பாசத்தைக் கண்டதும் ஸ்ரீராமின் கண்கள் கலங்கின. நேராக அந்த பூக்கடைக்குச் சென்று, தான் அனுப்பச் சொன்ன மலர்க்கொத்தை அனுப்பவேண்டாம் என கூறிவிட்டு, மலர்க்கொத்து ஒன்றை கையில் வாங்கிக்கொண்டு, 250 மைல் தூரத்தில் உள்ள தன் தாயைப் பார்க்க காரை ஓட்டினார் ஸ்ரீராம்.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.