2017-07-06 16:08:00

மெல்கத்திய முதுபெரும் தந்தையுடன் சிரியாவின் அரசுத்தலைவர்


ஜூலை,06,2017. மெல்கத்திய கிரேக்க கத்தோலிக்கத் திருஅவையில், புதிதாகத் தலைமைப் பொறுப்பேற்றிருக்கும் முதுபெரும் தந்தையை, சிரியாவின் அரசுத்தலைவர் பாஷார் அல் ஆசாத் அவர்கள் அண்மையில் சந்தித்தார்.

புதிய முதுபெரும் தந்தை முதலாம் யூசெப் அப்ஸி அவர்களையும், மெல்கத்திய கிரேக்க கத்தோலிக்க ஆயர்கள் சிலரையும், அரசுத்தலைவர் ஆசாத் அவர்கள், ஜூலை 4ம் தேதி, தமஸ்கு நகரில் சந்தித்தார் என்று பீதேஸ் (Fides) செய்தி கூறுகிறது.

சிரியா நாட்டில் நிலவும் பதட்டமான, நிலையற்றச் சூழலில், கத்தோலிக்கத் திருஅவையும், ஏனைய கிறிஸ்தவ சபைகளும், நாட்டின் ஒற்றுமைக்காக உழைத்துவருவதற்காக சிரியாவின் அரசுத்தலைவர், இச்சந்திப்பின்போது, தன் தனிப்பட்ட நன்றியைத் தெரிவித்தார் என்று பீதேஸ் செய்தி மேலும் கூறுகிறது.

2000மாம் ஆண்டு முதல், கடந்த 17 ஆண்டுகளாக, மெல்கத்திய கிரேக்க கத்தோலிக்கத் திருஅவையின் முதுபெரும் தந்தையாகப் பணியாற்றிய மூன்றாம் கிரகரி இலகாம் அவர்கள், இவ்வாண்டு மே மாதம் பணி ஒய்வு பெற்றதையடுத்து, ஜூன் 21ம் தேதி, முதலாம் யூசெப் அப்ஸி அவர்கள், முதுபெரும் தந்தையாகப் பொறுப்பேற்றார்.

ஆதாரம் : Fides / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.