2017-07-05 16:18:00

உலக ஆயர்கள் மாமன்ற கருத்துக்கணிப்பில், 60,000 இளையோர்


ஜூலை,05,2017. இளையோரை மையப்படுத்தி, 2018ம் ஆண்டு நடைபெறவிருக்கும் உலக ஆயர்கள் மாமன்றத்திற்கு தயாரிப்பாக, உலகெங்கும் அனுப்பப்பட்டிருந்த கருத்துக்கணிப்பிற்கு, இதுவரை 60,000த்திற்கும் அதிகமான இளையோர் பதிலளித்துள்ளனர் என்று வத்திக்கான் உயர் அதிகாரி ஒருவர் கூறியுள்ளார்.

உலக ஆயர்கள் மாமன்றத்தின் தலைமைச் செயலரான கர்தினால் லொரென்சோ பால்திஸ்ஸேரி (Lorenzo Baldisseri) அவர்கள், SIR என்ற இத்தாலிய செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியொன்றில், இளையோர் காட்டிவரும் ஆர்வம் குறித்து தன் பாராட்டுக்களை வெளியிட்டுள்ளார்.

இந்த மாமன்றத்திற்கு ஏற்பாடு செய்யும் வகையில், அண்மையில் துவக்கப்பட்ட ஒரு வலைத்தளத்தில், இதுவரை 1,73,000 இளையோர் பதிவு செய்துள்ளனர் என்றும், இவர்களில் கத்தோலிக்கர் அல்லாத இளையோரும் உள்ளனர் என்றும், கர்தினால் பால்திஸ்ஸேரி அவர்கள், தன் பேட்டியில் குறிப்பிட்டார்.

2018ம் ஆண்டு, அக்டோபர் மாதம், வத்திக்கானில், 15வது உலக ஆயர்கள் மாமன்றம், "இளையோர், நம்பிக்கை, அழைப்பைத் தேர்ந்து தெளிதல்" என்ற மையக்கருத்துடன் நடைபெறவுள்ளது.

ஆதாரம் : Zenit / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.