2017-07-05 15:39:00

ANSA நிறுவனத்தின் புதிய முயற்சிக்கு திருத்தந்தையின் வாழ்த்து


ஜூலை,05,2017. ஐரோப்பிய கலாச்சாரத்தின் அடித்தளமாக விளங்கும், மனிதாபிமானம் மிகுந்த கிறிஸ்தவ விழுமியங்களுக்கு, மீண்டும் ஒரு சாட்சியமாக ANSA நிறுவனத்தின் புதிய முயற்சி விளங்குவது கண்டு தான் மகிழ்வதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், அந்நிறுவனத்திற்கு அனுப்பிய வாழ்த்துச் செய்தியில் கூறியுள்ளார்.

செய்திகளைத் தொகுத்து வழங்க, இத்தாலியில் இயங்கிவரும் முன்னணி நிறுவனமான ANSA, குடிபெயர்வோர் தகவல் என்ற பொருள்படும் Infomigrants என்ற வலைத்தளத்தை துவக்கியிருப்பதையொட்டி திருத்தந்தை வழங்கிய செய்தியில் இவ்வாறு கூறியுள்ளார்.

உலகமனைத்தையும், குறிப்பாக, ஐரோப்பிய நாடுகளை பெருமளவில் பாதித்துவரும் குடிபெயர்வோர் மற்றும் புலம்பெயர்வோர் பிரச்சனைக்கு, சிறப்பான வழிகளில், தங்கள் பதிலிருப்பை வழங்கிவரும் ஐரோப்பிய நிறுவனங்கள், அரசுகள் அனைத்திற்கும், தன் பாராட்டுக்களையும், நன்றியையும் தெரிவிப்பதாக, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், இச்செய்தியில் கூறியுள்ளார்.

ஐரோப்பிய நாடுகளை வந்தடையும் குடிபெயர்வோர், அந்தந்த நாட்டின் சட்டங்களை அறிந்து, அதன்படி, தங்கள் வாழ்வை மாற்றியமைக்க, Infomigrants வலைத்தளம் பெரிதும் உதவும் என்று தான் நம்புவதாக, திருத்தந்தை, தன் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

அடக்குமுறை அரசுகள், தீவிரவாதம், வறுமை, பட்டினி என்ற பல்வேறு பிரச்சனைகளால் தங்கள் நாடுகளைவிட்டு வெளியேறியுள்ள சகோதர சகோதரிகள், ஐரோப்பிய சமுதாயத்தில் பாதுகாப்பும், ஆதரவும் பெறுவதற்கு, தன் செபங்களை உறுதியளிப்பதாக திருத்தந்தை பிரான்சிஸ் அவர்கள், ANSA நிறுவனத்திற்கு அனுப்பியுள்ள இச்செய்தியின் இறுதியில் கூறியுள்ளார்.

ஆதாரம் : ANSA / வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.