2017-07-04 15:22:00

கத்தார் நிலை குறித்து அதன் அப்போஸ்தலிக்க நிர்வாகி


ஜூலை.04,2017. சவுதி அரேபியா மற்றும், அதன் நட்பு நாடுகளின் பல்வேறு தடைகளினால், பொருளாதார நெருக்கடியை சந்தித்துவரும் கத்தார் நாட்டிலிருந்து எண்ணற்றோர் வெளியேறிவருவதாக கவலையை வெளியிட்டுள்ளார், வட அரேபியாவிற்கான அப்போஸ்தலிக்க நிர்வாகி ஆயர் Camillo Ballin.

வெளிநாடுகளிலிருந்து வந்து, கத்தாரில் வேலை செய்த பணியாளர்கள் பலர், நாட்டின் நிச்சயமற்ற நிலைகளால், கடந்த சில வாரங்களாக பெருமளவில் நாட்டை விட்டு வெளியேறிவருவதாகவும், இதில் பெருமெண்ணிக்கையில் கத்தோலிக்கர்களும் இருப்பதாக உரைத்த ஆயர் Ballin அவர்கள், உள்நாட்டு அரசியல் விவகாரங்களில் எவ்விதமான தனிப்பட்ட சுயநல ஆர்வமோ, தலையீடோ இல்லாமல் வாழ்ந்து வரும் வெளிநாட்டுப் பணியாளர்கள், தற்போதைய தடைகளால் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது, வேதனை தருவதாக உள்ளது என்றார்.

சவுதி அரேபியாவின் எதிரி நாடான ஈரானுடன் நெருங்கிய தொடர்பைக் கொண்டிருக்கும் கத்தார் நாடு, இஸ்லாமியத் தீவிரவாதக் குழுக்களுக்கு நிதியுதவி வழங்குகிறது என்ற குற்றச்சாட்டின்பேரில், அந்நாட்டிற்கு எதிரான தடைகளை விதித்து, காலக்கெடுவையும் வழங்கியுள்ளது சவுதி அரேபியா.

மூன்று இலட்சத்து 13 ஆயிரம் குடிமக்களைக் கொண்டுள்ள கத்தார் நாட்டில், 23 இலட்சம் வெளிநாட்டுப் பணியாளர்களும் உள்ளனர்.

இந்தியா, பிலிப்பீன்ஸ், பங்களாதேஷ், பாகிஸ்தான் ஆகிய நாடுகளிலிருந்தே பெரும் எண்ணிக்கையில் தொழிலாளர்களைக் கொண்டிருக்கும் இந்நாட்டில், இந்நெருக்கடிகளுக்குமுன், ஏறத்தாழ மூன்று இலட்சம் கத்தோலிக்கர்கள் இருந்தனர் எனச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : AsiaNews/வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.