2017-07-04 14:45:00

உரோம் திருத்தந்தையின் மருத்துவமனை Charlie Gardக்கு உதவ...


ஜூலை,04,2017. இலண்டனில், சுவாசப் பிரச்சனையாலும், தசையிறுக்க நோயாலும் துன்புறும், Charlie Gard என்ற, பத்து மாத ஆண் குழந்தைக்கு, உரோம் குழந்தை இயேசு (Bambino Gesu) மருத்துவமனையில் சிகிச்சை அளிப்பதற்கு முன்வந்துள்ளார், அம்மருத்துவமனை தலைவர்.

பெற்றோரின் விருப்பத்திற்கு மாறாக, அதேநேரம், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றத்தின் அனுமதியின்பேரில், வருகின்ற நாள்களில், Charlie Gardக்கு, உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்படவுள்ள நிலையில், உரோம் குழந்தை இயேசு மருத்துவமனைத் தலைவர், மரியெல்லா எனோக் அவர்கள், இவ்வாறு விருப்பம் தெரிவித்துள்ளார்.

குழந்தை Charlie Gardன் பெற்றோரின் விருப்பம் மதிக்கப்பட வேண்டுமென்ற, திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் விண்ணப்பம், உரோம் நகரிலுள்ள இச்சிறார் மருத்துவமனையின் பணிநோக்கத்தோடு ஒத்திணங்கிச் செல்கின்றது எனவும், தனது டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார் எனோக். 

இலண்டன் Great Ormond Street மருத்துவமனை நிர்வாகிகள், அங்குச் சிகிச்சை பெற்றுவரும் குழந்தை Charlie Gardஐ உரோம் மருத்துவமனைக்கு மாற்றுவது குறித்து பரிசீலனை செய்யுமாறு கேட்டுக்கொண்டுள்ளார், எனோக்.

உரோம் குழந்தை இயேசு மருத்துவமனை, திருத்தந்தையின் மருத்துவமனை எனவும் அழைக்கப்படுகின்றது.

குழந்தை Charlie Gard துன்புறும் அபூர்வ நோயால், உலகில், 16 சிறாரே தாக்கப்பட்டுள்ளனர் என, ஊடகச் செய்திகள் கூறுகின்றன.

ஆதாரம் : CNA/EWTN /வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.