2017-07-03 15:38:00

வாரம் ஓர் அலசல் – வாழுமிடமே வாழ்வுப் பாடம்


ஜூலை,03,2017. இலண்டனில், பிறப்பிலிருந்தே அபூர்வ நோயால் துன்புறும், Charlie Gard என்ற பத்து மாத ஆண் குழந்தை, அந்நகரின் Great Ormond Street சிறார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளான். அவன் வாழ்வது பயனற்றது என மருத்துவர்கள் கைவிட்ட நிலையில், தங்கள் மகனுக்கு அமெரிக்க ஐக்கிய நாட்டில் சிகிச்சையளிக்க பெற்றோர் விரும்பினர். ஆனால், பிரித்தானியாவின் மூன்று நீதிமன்றங்கள், மற்றும், ஐரோப்பிய மனித உரிமைகள் நீதிமன்றம், அதற்கு அனுமதியளிக்கவில்லை. இதற்கிடையே, குழந்தைக்குப் பொருத்தப்பட்டிருந்த உயிர்காக்கும் கருவிகள் அகற்றப்பட்டுவிடும் என ஊடகச் செய்திகள் கூறுகின்றன. மேலும், இப்பெற்றோருக்கு ஆதரவாக கடந்த வாரத்தில், பல்லாயிரக்கணக்கானோர் குரல் எழுப்பியதோடு, அமெரிக்க ஐக்கிய நாட்டிற்குக் கொண்டு செல்வதற்கு நன்கொடைகளையும் வழங்கியுள்ளனர். தென் இத்தாலியில் ஒரு தம்பதியர், இக்குழந்தையைப் பாதித்த அதே நோயால் தாக்கப்பட்ட தங்கள் மகன் இம்மானுவேலுக்கு (Emanuele Campostrini) இப்போது வயது ஒன்பது, அவன் பள்ளி செல்கிறான் என, Gardன் பெற்றோருக்குத் தெரிவித்துள்ளனர். வத்திக்கான் தூய பேதுரு வளாகத்தில், கடந்த வெள்ளி இரவில், மனித வாழ்வுக்கு ஆதரவளிக்கும் தன்னார்வலர்கள் செப வழிபாடு நடத்தினர். திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களும், இக்குழந்தையின் பெற்றோருடன் தனது ஒருமைப்பாட்டுணர்வைத் தெரிவித்துள்ளதோடு, அவர்களின் விருப்பம் மதிக்கப்பட வேண்டுமென்று கேட்டுக்கொண்டுள்ளார் என, திருப்பீடச் செய்தித் தொடர்பாளர் கிரெக் பர்க் அவர்கள், இஞ்ஞாயிறன்று தெரிவித்துள்ளார்.

வாழ்வை வழங்கும் கடவுளுக்கே, வாழ்வை எடுக்கும் உரிமை உள்ளது. ஆனால், மனிதரை, மனித மாண்பை, மனித வாழ்வை அலட்சியப்படுத்தும் ஒரு போக்கையே பரவலாக நாம் காண முடிகின்றது. ஆயினும், இருளில் மின்னும் மின்மினிகள் போன்று, இருளடர்ந்த சமூகத்தில் ஒளிரும் விளக்குகளும் உள்ளனர் என்பதை நாம் மறுப்பதற்கில்லை. திருநெல்வேலி சதக்த்துல்லா அப்பா (Sadakathullah Appa) கல்லூரியின் மாணவர்கள், மாநகரத்து வீதிகளில், மனநலம் பாதித்த மனிதர்களைக் கண்டவுடன், அவர்களுக்கு உணவு மற்றும் உடைகளை வழங்கி வருகின்றனர். இதற்கென்றே, இந்தக் கல்லூரியின் முதல்வர் முகமது சாதிக் அவர்கள், ‘மனிதம் அறக்கட்டளை’யை உருவாக்கியிருக்கிறார். மாணவர்களின் இப்பணி பற்றி, தி இந்து தினத்தாளுக்குப் பேட்டியளித்த, முகமது சாதிக் அவர்கள், இவ்வாறு பகிர்ந்து கொண்டுள்ளார்.

சாலையோரம் கேட்பாரற்று சுற்றித் திரியும் மனநலம் பாதித்தோருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்பது எனது நெடுநாளைய கனவு. தொடக்கத்தில் என்னால் முடிந்த உணவு, உடைகளை அவர்களுக்குக் கொடுத்து வந்தேன். ஒரு கட்டத்தில், இதை நாம் ஒருவராகச் செய்வதைவிட ஓர் இயக்கமாக மாற்றினால் என்ன என்று தோன்றியது. அதில் உதயமானதுதான் ’மனிதம் அறக்கட்டளை.’ சமூக சேவையில் ஆர்வமுள்ள மாணவர்களே இதன் அங்கத்தினர்கள். இவர்களைக் கொண்டு நெல்லை மாநகராட்சி பகுதியில், மனநலம் பாதிக்கப்பட்ட 35 பேரையும், அவர்களின் சாலையோரத்து இருப்பிடத்தையும் அடையாளப்படுத்தி உள்ளோம். இவர்களுக்கு மாணவர்கள் தினமும் உணவு வாங்கிக் கொடுப்பார்கள். மனிதம் வாட்ஸ்அப் குழு ஒன்றும் அமைத்துள்ளோம். இதில் உள்ளவர்கள், மனநலம் பாதித்தவர்களை எங்காவது பார்த்தால், அந்த நபரின் புகைப்படம், இருக்குமிடம் இவற்றைப் பதிவிடுவார்கள். அடுத்த சில நிமிடங்களில் மனிதம் மாணவர் படை அங்கு நிற்கும். குற்றாலத்துக்கு சுற்றுலா வரும் சிலரும் மனநலம் பாதித்தவர்களைக் கொண்டுவந்து இங்கே விட்டுவிட்டுச் சென்றுவிடுகிறார்கள். இப்படி விடப்படுபவர்கள் தங்களது சொந்த ஊர்கூடத் தெரியாமல் இங்கே சாலையோரங்களில் கிடந்து அல்லல்படுகின்றனர். நாங்கள் கொடுக்கும் சாப்பாட்டை பலர் வாங்கிச் சாப்பிடுவார்கள். சிலர், எங்களைத் திட்டவும், கல்லால் தாக்கவும் முயற்சிப்பார்கள். இதையெல்லாம் அவர்கள் சுயநினைவோடு செய்வதில்லை என்பதால் நாங்கள் பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை. மனநலம் பாதிக்கப்பட்டோருக்காக இலவச இல்லம் ஒன்றை அமைக்கத் திட்டமிட்டுள்ளோம்.

தன்னலமின்றி இடம்பெறும் சேவைகள் பற்றி அறியவரும்போது, நமக்கும் அப்படிப்பட்ட சேவைகள் மீது ஆர்வம் ஏற்படுகின்றது. இச்சேவையாற்றும் ஆர்வலர்கள் எவரும், விளம்பரப் பிரியர்களும் அல்ல. அண்மையில் நடந்த ஒரு நிகழ்வைப் பகிர்ந்து கொள்கிறோம். அந்த விமான நிலையத்தை அடையும் போதுதான், விமானத்தின் முன்சக்கரங்கள் முழுமையாக வெளியே வராமல் போனதை விமானி அறிந்துள்ளார். இந்நிலையில் விமானத்தை தரையிறக்கினால், அது விபத்துக்கு உள்ளாகி பாதையை விட்டு விலகி வெடிக்கலாம். ஆனால், தொடர்ந்து பறக்க எரிபொருள் பற்றாக்குறை ஏற்பட வாய்ப்புகளும் இருந்தன. மேலும், எரிபொருள் மீதியாக அதிகம் இருந்தாலும் ஆபத்து. ஏனெனில், விமானம் தரையிறங்கும்போது விபத்துக்கு உள்ளானால், எரிவதற்கு அது பெரிதும் உதவும். இதனால் எரிபொருள் காலியாகும்வரை வானில் சுற்றியது விமானம். இதற்கிடையில், தரையில் உள்ள கட்டுப்பாட்டு அறை, விமானம் தரையிறங்கும்போது அதன் முன்சக்கரங்கள் தரையில் தட்டாதவண்ணம் அதனைத் தாங்கிப் பிடிக்க, ஒரு பெரிய வாகன ஓட்டுனரைத் தயார் செய்தது. அந்த ஓட்டுனர், சற்று ஆட்டம் கண்டாலும், விமானம், பாதை மாற வாய்ப்புகள் உண்டு. அதோடு விமானம் தரையிறங்கும்போது, அது என்ன வேகத்தில் செல்கிறதோ அதே வேகத்தில் அவர் தனது வாகனத்தைச் செலுத்தவேண்டும். அந்த ஓட்டுனர் கவனமாகச் செயல்பட்டு, அந்த விமானத்தில் பயணித்த 300 பேரின் உயிரைக் காப்பாற்றியுள்ளார். இதற்குப்பின், அந்த வாகன ஓட்டுனரைப் பாராட்டி, அவரிடம் பேட்டி எடுக்க, பல ஊடகங்கள் வரிசையில் நின்றன. ஆனால் அவர், இது எனது கடமை என்று மட்டும் சொல்லி, பேட்டி கொடுக்க மறுத்துவிட்டாராம்.

ஒருசமயம் சாது ஒருவர், மலைப்பகுதியில் குதிரை மீது வந்து கொண்டிருந்தார். அவர் வரும் வழியில், பாதையின் ஓரமாக ஒருவன் மயங்கிக் கிடந்தான். அவனைக் கண்ட சாது, குதிரை மேலிருந்து கீழே இறங்கினார். அவனை அசைத்துப் பார்த்தார். அவன் அசையாமல் கிடக்கவே, தனது குதிரையின் பக்கவாட்டில் தொங்கிய குடுவையில் இருந்த நீரை எடுத்து, அவன் முகத்தில் தெளித்து வாயிலும் ஊற்றினார். மயக்கம் தெளிந்து கண்விழித்த அந்த நபரை, மெல்லப் பிடித்துத் தூக்கிக் குதிரை மீது ஏற்றினார் சாது. குதிரை மீது உட்கார்ந்த மறுகணமே அவன் அந்தக் குதிரையின் கடிவாளத்தை உலுக்கவும், குதிரை தடதடவென்று பறந்தோடி மறைந்து விட்டது. திகைத்துப் போனார் சாது. அப்போதுதான் அவன் ஒரு திருடன் என்பதும், இதுவரை அவன் நடித்துள்ளான் என்பதும் அவருக்குத் தெரிந்தது. குதிரை இல்லாததால் இரவு முழுவதும் மெல்ல நடந்து வீட்டை அடைந்த அவர், சில நாள்கள் கழித்து, சந்தைக்கு குதிரை வாங்கப் போனார். அங்கே குதிரைகள் விற்குமிடத்தில் அந்தத் திருடன் இவரது குதிரையுடன் நின்று கொண்டிருந்தான். சாது மெல்லச் சென்று, அவனது தோளைத் தொட்டார். திரும்பிப் பார்த்த திருடன் பேயறைந்தது போல் நின்றான். சாது மெல்லச் சிரித்தார். "சொல்லாதே!" என்றார். மிரண்டுபோன திருடன், "எது? என்ன?" என்று, ஒன்றுக்கொன்று தொடர்பில்லாமல் உளறிக் கொட்டினான். சாது சொன்னார்...

"குதிரையை நீயே வைத்துக்கொள். ஆனால், நீ அதை அடைந்த விதத்தை யாரிடத்திலும் சொல்லாதே. மக்களுக்கு இப்படி ஒரு சம்பவம் நடந்தது தெரியவந்தால், எதிர்காலத்தில் உண்மையிலேயே யாராவது சாலையில் மயங்கிக் கிடந்தால்கூட உதவ முன் வரமாட்டார்கள். நான் இந்தக் குதிரையை இழந்ததால் எனக்கு ஏற்படும் இழப்பை பற்றி நான் கவலைப்படவில்லை. காரணம், சில நாள்கள் உழைத்து சம்பாதித்து வேறு ஒரு குதிரையை நான் வாங்கிவிட முடியும். தீயவன் நீ ஒருவன் தவறு செய்ய, நல்லவர்கள் பலருக்கு, காலா காலத்துக்கும் உதவி கிடைக்காமல் உயிர் போககூடும். புரிகிறதா?"

இவ்வாறு சாது சொன்னதும், திருடனின் கண்களிலிருந்து கண்ணீர் வழிந்தது. குறுகிய ஆதாயங்களுக்காக நல்ல கோட்பாடுகளை நாம்  சிதைத்துவிடக் கூடாது. ஒருநாள் முடிதிருத்தம் செய்யும் கடைக்கு, மலர் விற்பனையாளர் ஒருவர் சென்று, முடிதிருத்தம் செய்து கொண்டார். கடைசியில், எவ்வளவு பணம் என்று கேட்டபோது, இவ்வாரத்தில் நான் சமூகப் பணி செய்கிறேன், அதனால் நான் கூலி வாங்குவதில்லை என்றார். மகிழ்வோடு சென்றார் மலர் விற்பனையாளர். மறுநாள் முடிதிருத்தம் செய்பவர் கடையைத் திறந்தபோது, வாயிலில் நன்றி என எழுதப்பட்ட அட்டையோடு, ரோஜா மலர்க்கொத்தும் இருந்தன. அன்றைய நாளில் மளிகைக் கடைக்காரர் ஒருவர் வந்து முடிதிருத்தம் செய்துகொண்டார். பின் அவர் பணம் எவ்வளவு எனக் கேட்டபோது, அவரிடமும் அவ்வாறே சொன்னார் கடைக்காரர். அடுத்தநாள் முடிதிருத்தக் கடையைத் திறக்கவந்தபோது, நன்றி என எழுதப்பட்ட அட்டையோடு, காய்கறிகள் நிறைந்த ஒரு பை இருந்தது. அந்நாளில் ஓர் அரசியல்வாதி வந்து முடிதிருத்தம் செய்துகொண்ட பின், அவரிடமும் அவ்வாறே சொன்னார் கடைக்காரர். மிகவும் மகிழ்வோடு சென்றார் அரசியல்வாதி. அடுத்தநாள் முடிதிருத்தக் கடைக்காரர் கடையைத் திறக்க வந்தபோது, ஒரு பன்னிரண்டு பேர் முடிதிருத்தம் செய்வதற்கு வரிசையாக நின்றார்களாம். இதைக் கேட்கும்போது நமக்குச் சிரிப்பு வராமல் இருக்காது. ஆனால் இத்தகைய ஒரு சமூகத்தில், கடமையைச் செய், பலனை எதிர்பாராதே என்று வாழ்பவர்களை, நன்றியோடு நாம் நினைவுகூர்கின்றோம். ஒருவர் கடவுளிடம், நான் எப்படி வாழ வேண்டுமெனக் கேட்டாராம். அதற்கு கடவுள் உனது அறையைப் பார் என்றாராம். அறையைப் பார்த்தபோது, உயரிய எண்ணம் கொண்டிரு என்று மேற்கூரையும்,  அமைதியாக இரு என்று காற்றாடியும், நேரத்தை மதித்து நட என கடிகாரமும், எதையும் தள்ளிப் போடாதே என நாள்காட்டியும், வருங்காலத்திற்காக இப்போதே சேமித்து வை என பணப்பையும், எப்போதும் உன்னைக் கவனி என கண்ணாடியும், பிறரின் வாழ்வில் ஒளியேற்று என விளக்குகளும், பிறரின் சுமைகளைப் பகிர்ந்துகொள் என சுவரும், கண்ணோட்டத்தை விரிவாக்கு என ஜன்னல்களும், தாழ்மையாய் இரு என தரையும், நீ செல்லும் ஒவ்வொரு படியையும் கவனி என படிக்கட்டுகளும் சொன்னதாம். உடனே அந்த நபர் நன்றி இறைவா என்றாராம். ஆம். நாம் வாழுமிடமே நமக்கு வாழ்வுப் பாடமாகின்றது.

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.