2017-07-03 14:45:00

பாசமுள்ள பார்வையில்.. தாய் ஒரு ‘மனித தெய்வம்'


தனது அன்னை குறித்து, பிரபல தணிக்கையாளரும், பத்திரிகையாளருமான சு.குருமூர்த்தி அவர்கள் இவ்வாறு எழுதியிருக்கிறார்...

என் தாயின் மேன்மையைப் பற்றித் தெரிந்துகொள்ள, பொருளாதாரத்தில் வேறுபட்ட, பல குடும்பங்களிலிருந்து வந்த அவருடைய நான்கு மருமகள்களிடமும் பேசினாலே போதும். என் தாய் பள்ளிக்கூடம் சென்றதில்லை. படிக்கத் தெரியும் அவ்வளவுதான். தனது கிராமத்தைச் சேர்ந்த விவசாயியான சுவாமிநாதன் என்பவரை, தனது ஒன்பதாவது வயதில், கணவராக ஏற்றார் அவர். 1950களில், பல ஆண்டுகள் மழை பெய்யாததால், நிலங்களை ஒன்றுக்குப்பின் ஒன்றாக விற்க வேண்டியதாயிற்று. குடும்பம் வறுமைக்கோட்டுக்குள் நுழைந்தது. அந்த நிலையில், 1955ம் ஆண்டில் கணவரை இழந்து, கைம்பெண்ணானார் என் தாய். அப்போது அவருக்கு வயது 39. அதற்குப் பிறகு வறுமையுடன் போராட்டம். உற்றார், உறவினர்களின் உதாசீனம். நான் பள்ளிப்படிப்பு படித்து முடிக்கும்வரை கிராமத்திலேயே இருந்துவிட்டு, அதன் பிறகுதான் சென்னை வந்தார் என் அம்மா. சென்னையில் 12 பேர் அடங்கிய எங்கள் குடும்பத்திற்கு வாடகைக்கு வீடுதர யாரும் முன்வராமல் இருந்த சோதனையான காலக்கட்டத்தையும் சிரித்துக்கொண்டே எதிர்கொண்டார் என் தாய். நான்கு பிள்ளைகளும் படிப்படியாக நல்ல நிலைக்கு வந்து, திருமணம் ஆகிக் குழந்தைகள் பிறந்த பிறகுதான், சொந்த வீடு வாங்கினோம். அதன்பின் அம்மாவின் ஆசி பெற, உற்றார் உறவினர் மற்றும், பெரிய பெரிய மனிதர்கள் எல்லாம் வீட்டுக்கு வருவார்கள். ஆனால், என் தாயின் வாழ்க்கையில் ஒரு மாறுதலும் கிடையாது. வறுமையில் அவர் எப்படி துவளவில்லையோ, அதேபோல் பெருமைகளும் அவரை மதிமயங்க வைக்கவில்லை. இன்பத்தையும் துன்பத்தையும் ஒன்றுபோல ஏற்றுக்கொண்ட அவர், குடும்பத்தில் வாழ்ந்த துறவி. அவருக்குத் தெரிந்த மந்திரம் எல்லாம், நெறிதவறா வாழ்க்கையும், அறம் தவறாக் குடும்பமும், ஒருவருக்கொருவர் ஆற்றும் எதிர்பார்ப்பில்லாத உழைப்பும்தான். தாய் ஒரு ‘மனித தெய்வம்’

ஆதாரம் : வத்திக்கான் வானொலி








All the contents on this site are copyrighted ©.